ஹோம் ஒர்க் நோட் எங்கே?.. 8-ம் வகுப்பு மாணவரை அடித்து கழுத்தை பிடித்த ஆசிரியை - சிகிச்சையில் சிறுவன்!
ஆசிரியை ஒருவர் மாணவரை அடித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோம் ஒர்க் நோட்
தூத்துக்குடி மாவட்டம், களப்பான்குளத்தைச் சேர்ந்தவர் கவிதா, இவர் தனது கணவரை இழந்து சந்தோஷ், மதுமிதா என்று 2 குழந்தைகளை வளர்த்து வருகிறார். இவர் கோவில்பட்டி தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார், அப்பொழுது சமூகவியல் ஆசிரியை ரெமிலா, மாணவர்களிடம் ஹோம் ஒர்க் நோட்டை கேட்டுள்ளார்.
அப்பொழுது மற்ற மாணவர்கள் நோட்டை காண்பித்து கையெழுத்து வாங்கினர். சந்தோஷிடம் கேட்டபொழுது அவர் நோட் தொலைந்துவிட்டதாக கூறியுள்ளார். அதனால் அந்த ஆசிரியை ஹோம் ஒர்க் செய்யாமல் பொய் சொல்கிறாயா ? என்று கேட்டு பிரம்பால் அடித்துள்ளார். இதில் சந்தோஷுக்கு கை மற்றும் முதுகில் லேசான காயம் ஏற்பட்டது.
சிகிச்சையில் சிறுவன்
இந்நிலையில், ஆத்திரமடைந்த அந்த ஆசிரியை சந்தோஷ் கழுத்தைப் பிடித்து அடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதை மாணவர் தடுக்கவே, அவருடைய வகுப்பறையை விட்டு வெளியே தள்ளியதாகவும், தனக்கு இருக்கும் கோபத்தில் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று ஆவேசத்துடன் கூறியதாகவும் கூறப்படுகிறது. பின்னர், அந்த மாணவரின் தாய்க்கு போன் செய்து வரவழைத்துள்ளார், வேகமாக வந்து பார்த்த தாய் அதிர்ந்து போனார்.
உடனே, பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தார், பின்னர், கழுகுமலை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரித்த போலீசார் அந்த ஆசிரியை மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், காயமடைந்த மாணவருக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.