இந்த நாடுகளில் வருமான வரியே கட்ட தேவை இல்லை - இந்தியாவில் மட்டும் ஏன்?
உலகின் சில நாடுகளில் மக்கள் வருமான வரி கட்ட தேவை இல்லை.
வருமான வரி
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அரசுக்கு வரி செலுத்துகின்றனர். சிலர் வருமான வரி, சொத்து வரி, பணபரிவர்த்தனை வரி என நேரடி வரி செலுத்துகின்றனர். பெரும்பாலான மக்கள் மதிப்பு கூட்டு வரி, சுங்கவரி, கலால் வரி, சரக்கு மற்றும் சேவை வரி என பல மறைமுக வரிகளை செலுத்துகின்றனர்.
ஆனால் உலகில் சில நாடுகளில் வருமான வரியே வசூலளிப்பதில்லை. அங்கு எவ்வளவு சம்பாதித்தாலும் அவர்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்த தேவை இல்லை.
வரி இல்லாத நாடுகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவுதி அரேபியா, ஓமன், கத்தார் போன்ற வளைகுடா நாடுகள் பெரும்பாலானவை வருமான வரி விதிப்பதில்லை. இந்த நாடுகள் எண்ணெய் வளம் மிக்கவை. இங்கிருந்து பிற நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதன் மூலமும், சுற்றுலா துறை மூலம் வருமானம் ஈட்டுகிறது. இதனால் அங்கு வருமானம் ஈட்டுபவர்களுக்கு அரசாங்கம் வரி விதிப்பதில்லை.
மேலும், பஹாமாஸ், மொனாக்கோ, பெர்முடா, புருனே, நவ்ரூ, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், வாடிகன் போன்ற நாடுகளிலும் வருமான வரியே கிடையாது. மொனாக்கோ, பெர்முடா ஆகிய நாடுகள் நிதிக்கான சேவைத் துறையை நம்பியுள்ளது. இந்த நாடுகளில் வங்கி, காப்பீடு, முதலீடு உள்ளிட்டவற்றில் இருந்து அதிக வரி கிடைப்பதால் இந்த நாடுகள் வருமான வரி வசூலளிப்பதில்லை.
பிற நாடுகளும் இது போன்ற மாற்று வழிகளில் வருமானம் ஈட்டுகின்றன. இந்த நாடுகளில் மக்கள் தொகையும் மிக குறைவாக இருப்பதால் இந்த வருவாயே அரசாங்கத்தையும் நாட்டையும் நிர்வாகம் செய்ய போதுமானதாக உள்ளது.
இந்தியா
இந்த நாடுகளை ஒப்பிடும் போது இந்த பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட இந்தியாவின் மக்கள் தொகை மிக மிக அதிகம். வருமான வரி வருவாய் இந்திய அரசாங்கத்தின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்குள்ள மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்ய நாட்டின் உட்புற கட்டமைப்பை மேம்படுத்த அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. இதற்காக வருமான வரி அவசியம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவில் 3 லட்சத்துக்கு அதிகம் வருமானம் பெறுபவர்கள் வரி கட்டவேண்டும். வருமானத்திற்கு ஏற்ப வரி விகிதம் அதிகரிக்கும். 2023-24 நிதி ஆண்டில் இந்திய அரசுக்கு வருமான வரி மூலம் கிடைத்த தொகை 10 லட்சம் கோடி ஆகும்.