மத்திய பட்ஜெட் 2024-25; வருமான வரி விதிப்பில் முக்கிய மாற்றம்
மத்திய பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 2024-25 ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் 2024-25 நிதி ஆண்டுக்கான இந்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது , பலரும் எதிர்பார்த்த வருமான வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
வருமான வரி
இதில், புதிய வருமான வரி முறையை பின்பற்றுவோருக்கான வரி நடைமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி ஆண்டுக்கு 3 லட்சம் சம்பளம் வாங்குவோருக்கு வரி இல்லை.
3 லட்சம் முதல் 7 லட்சம் என்றால் 5%, 7 லட்சம் முதல் 10 லட்சம் என்றால் 10%, 10 லட்சம் முதல் 12 லட்சம் என்றால் 15%, 12 லட்சம் முதல் 15 லட்சம் என்றால் 20%, 15 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் என்றால் 30% வரி செலுத்த வேண்டும்.
இதற்கு முன்பு ரூ 3 லட்சம் முதல் ரூ 6 லட்சம் வரை வருமானம் என்றால் 5% வருமான வரி செலுத்த வேண்டும். தற்போது 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல முன்பு ரூ.9 லட்சம் வரை வருமானம் என்றால் 10% வரிசெலுத்த வேண்டும் அதுவும் இப்போது ரூ10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரிச்சலுகை
மேலும், தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகை நிலையான கழிவு ரூ50,000 த்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்படும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கான 'ஏஞ்சல் வரி' ரத்து செய்யப்படும், வரி கணக்கு தாக்கல் செய்ய தாமதமானால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக என்றும் அறிவித்தார்.
தற்போதைய புதிய முறையில் வரி செலுத்துவோருக்கு தற்போதைய சலுகை மூலம் ரூ.17,500 சலுகை கிடைக்கும் என்றும், நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.வருமான வரி செலுத்துவோரில் 3 ல் 2 பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.