மத்திய பட்ஜெட் 2024 -2025; புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் ஒரு மாத ஊதியம்

Smt Nirmala Sitharaman India Budget 2024
By Karthikraja Jul 23, 2024 05:53 AM GMT
Report

  மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

மத்திய பட்ஜெட்

2024-25 நிதி ஆண்டுக்கான இந்திய பட்ஜெட்டை நாடாளுமன்றதில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். ஏற்கனவே லோக்சபா தேர்தல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 2024-25 ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

budget 2024-25 important schemes

தற்போது பாஜக தனிப்பெரும்பான்மை இழந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.நேற்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது. புதிய பட்ஜெட்டுக்கான ஒப்புதலை குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுவிட்டு நாடாளுமன்றம் வந்து சேர்ந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இவர் தாக்கல் செய்யும் 7 வது பட்ஜெட் இதுவாகும்.  

தமிழ்நாடு

பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் எதிர்பார்ப்புகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, கோவை மதுரை மெட்ரோ ரயில் அனுமதி, வருமான வரி குறைப்பு, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல், வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு என 6 முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார்.

இந்த கோரிக்கைகள் குறித்து மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வர உள்ளதா, வேறு என்ன புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.       

 முக்கிய அறிவிப்புகள்

இந்நிலையில், தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கி விட்டார். பட்ஜெட் தாக்கலின் போது பேசிய அவர் இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருப்பதாகவும், சர்வதேச பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவி வருவதாகவும் கூறி உள்ளார். இதன் பின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் 'பிஎம் கரீப் அன்ன யோஜனா' திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுக்காக ₹1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது. 

உள்நாட்டு கல்வி நிலையங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட உள்ளது.  

முத்ரா கடன் உதவித் திட்டத்தில் கடன் தொகை ₹20 லட்சமாக உயர்வு.  ஊரக வளர்ச்சிக்கு ₹2.66 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு.

 பீகாரில் புதிய சாலை கட்டமைப்புகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு. 

தொழில் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5,000 மற்றும் CSR நிதியில் இருந்து ரூ.6000 தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டும். 

சென்னை - விசாகப்பட்டினம் இடையே விரைவு சாலை அமைக்கப்படும்.  இலவச சூரிய ஒளி மின் திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளுக்கு தலா 300 யூனிட் மின்சாரம் வழங்கப்படும். 

புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும். இ.பி.எப்.ஓவில் பதிவு செய்து ரூ15,000 முதல் ரூ1 லட்சம் வரை பெரும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் வழங்கப்படும்.