வலிமையான பிரதமரா? வார வாரம் ஒரு பிரதமரா? யார் வேண்டும் - தமிழிசை கேள்வி
தெலுங்கானா மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மறுபடியும் நல்லாட்சி
அப்போது, தமிழ்நாட்டுக்கு நிதியும் உள்ளது - நீதியும் உள்ளது. விபி.சிங் முதல் மன்மோகன் சிங் வரை மத்தியில் ஆண்ட போது ஸ்டாலின் கட்சி கொடுத்த திட்டங்களை விடவும் தற்போதைய பிரதமர் மோடி அதிக திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்துள்ளார் என்றார்.
மாநிலத்திற்கு வழங்கும் நிதியை பொறுத்தவரையில் வறட்சி மற்றும் வெள்ள நிவாரணத்தை கணக்கீடு செய்ய விதிகள் உள்ளது என குறிப்பிட்ட அவர், அதன்படிதான் நிதி கொடுத்து இருக்கிறார்கள் என்றும் கூறினார். மத்தியில் மறுபடியும் நல்லாட்சி வர இருக்கும் நிலையில், அதனை பொறுக்க முடியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் இப்படி கூறுகிறார் என குற்றம் சாட்டினார்.
வலிமையான பிரதமர்
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிதம்பரம் நிதியமைச்சராக இருந்து குறிப்பிட்ட ஒரு திட்டத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தோம் என சொல்லட்டும் பார்க்கலாம் என வினவிய தமிழிசை, நடந்த 2 கட்ட தேர்தல்களில் பிரதமர் மோடி முன்னிலையில் இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
நாட்டிற்கு வலிமையான பிரதமர் இருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி கூறுவது போல, வாரத்திற்கு ஒரு பிரதமர் இருக்க கூடாது என்ற தமிழிசை, பாஜகவால் மட்டும்தான் வலிமையான பிரதமரை கொடுக்க முடியும் என்று தெரிவித்து, அவர்களால் பிளவுபட்ட பாரதத்தைத்தான் கொடுக்க முடியும் என சாடினார்.