பெண்களை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த ஆந்திர போலீசார் - பரபரப்பு புகார்!
பழங்குடியின பெண்களை ஆந்திர போலீசார் விசாரணை பெயரில் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறவர் இன பெண்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுக்காவில் உள்ள மாத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியாண்டபட்டி கிராம குறவர் இன மக்களில் சிலர் இன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சகுந்தலா என்ற பெண் பேசினார் அதில், "கடந்த ஜூன் 11-ம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் போலீஸார், எனது கணவர் வைரமுத்துவைத் தேடி வந்தனர்.
எனது கணவர் கூலி வேலைக்காக கேரளா சென்றிருப்பதாக கூறினேன். இதனால் என்னையும், என் மாமியாரையும் அன்றைய இரவே சித்தூர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு திருடியதை ஒப்புக்கொள்ளுமாறு அடித்து சித்ரவதை செய்தனர். அங்கிருந்த ஆண் காவலர்கள் என்னை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து ரசித்தனர். திருட்டை ஒப்புக்கொள்ளாவிட்டால், இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டினர்" என்று கூறினார்.
கண்ணீர் மல்க புகார்
இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், "திருட்டுச்சம்பவம் பற்றியே தெரியாது என்று அழுத என்னை காவல் நிலையத்தில் கட்டி வைத்து அடித்தனர். சில போலீஸார் என்னைப் பிடித்துக் கொள்ள சிலர், ஆடைகளை அவிழ்த்து பிறப்புறுப்பில் மிளகாய் பொடியைத் தேய்த்து கொடுமைப்படுத்தினர். அத்துடன் தாங்கள் காட்டும் கடையில் தான் நகையைக் கொடுத்தேன் என்று சொன்னால், வீடியோவை அழித்து விடுவதாகவும் கூறி ஐந்து நாட்களாக அடித்து சித்ரவதைப்படுத்தினர்.
அவர்களின் அடி மற்றும் சித்ரவதை பொறுக்கமாட்டாமல் திருட்டை ஒப்புக்கொண்ட என்னை சிறையில் அடைத்தனர்" என்று கூறினார். மேலும் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் இதில் ஈடுபட்ட ஆந்திரா போலீஸார் 20 பேர், அவர்களுக்கு துணையாக இருந்த தமிழக போலீஸார் மீது சட்டப்படி நடவடிக்க எடுத்து அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.