ஹாட் ஸ்பாட்டான மாவட்டங்கள்.. காலநிலையில் மாற்றம் - வெதர்மேனின் அதிர்ச்சி தகவல்
வடகிழக்கு பருவமழையால், வாரந்தோறும் அதிகமாக காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதாக தமிழக வெத்ர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் என வழக்கமாக மழை வெளுத்து வாங்கும். இந்த மாதங்களில் பெய்யும் மழையை பொருத்தே கோடை காலங்களில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.
அந்த வகையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே காலநிலையில் மாற்றம் ஏற்பட்டது. 2வது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை தாமதமாக 2 வாரங்கள் கழித்தே தொடங்கியது.
மிக அதிக கனமழை
இதுகுறித்து, தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான், வடதமிழக கடலோர பகுதிகளான நாகை, காரைக்கால், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் இன்றும், நாளையும் ஹாட் ஸ்பாட்டுகளாக இருக்கப்போகின்றன. அதுபோல், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் நாளை வரை மிக அதிக கனமழை பெய்யும்.
தென் கேரள பகுதிகளான திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, ஆலப்புழா மற்றும் தமிழகத்தின் தென் கோடியான கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இன்று முதல் நாளை வரை மழை பெய்யும். நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருவண்னாமலை, விழுப்புரம் மற்றும் கடலோரத்திற்கு அருகே உள்ள உள் மாவட்டங்களுக்கும் மழை இருக்கும்.
மேற்கண்ட இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு வரும் நாட்கலில் மழை பெய்யும். தமிழகத்தில் நீண்ட நாட்கலுக்கு மழை பெய்ய போகிறது. அடுத்தடுத்த வளிமண்டல சுழற்சிகள் ஏற்பட போகின்றன. வாரந்தோறும் குறைந்த காற்றழுத்தம் உருவாக வாய்ப்பிருக்கிறது என தெரிவித்துள்ளார்.