நவ 13-ல் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் வரும் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ஏற்கெனவே தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலைகொண்டுள்ளது. இதைத்தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 11ஆம் தேதி அதிகாலை வடதமிழகத்தை நோக்கிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்துவருகிறது. நாகை மாவட்டம் திருப்பூண்டியில் அதிகளவாக 31 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் வரும் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு, தீவிரமடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் என்றும் தெரிவித்திருக்கிறது.