நாட்டிலே அதிக மின்சார வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு தகவல்
தமிழ்நாடு தான் நாட்டிலே அதிகளவில் தினமும் சராசரி மின்சாரம் வழங்கப்படுவதாக மத்திய அரசு தகவல் அளித்துளளது.
பட்ஜெட் கூட்டத்தொடர்
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் எழுத்துபூர்வமாக உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு துறைசார் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவது குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய மின்துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் பதிலளித்தார்.
மின் இணைப்பு
சௌபாக்கியா திட்டத்தின் கீழ் 2.86 கோடி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தீன் தயாள் உபாத்தியா கரீம் ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 18,374 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது போல், பல்வேறு திட்டங்களின் மூலம் நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் , 2023 – 2024 ஆம் நிதியாண்டில் தேசிய அளவில் நகர்ப்புற பகுதிகளில் தினசரி 23.4 மணி நேரமும், கிராமப்புறங்களுக்கு 21.9 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
குறிப்பாக, தமிழ்நாடு, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட 3 மாநிலங்களில் மட்டுமே நகர்ப்புறங்களுக்கு 24 மணி நேர சராசரி மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும், கிராமப்புறங்களில் சராசரி மின்சாரத்தை அதிக அளவில் வழங்கி தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.
தமிழகத்தில் கிராமப்புறங்களுக்கு 23.5 மணி நேரமும், தெலுங்கானாவில் 21.9 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் கிராமங்களில் ,மின்சாரம் வழங்கப்பட்ட தரவுகள் இல்லை. நாட்டிலே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் கிராமப்புறங்களுக்கு சராசரியாக 18.1 மணி நேர மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.