இந்திய குடியுரிமை வேண்டாம்; வெளிநாடு சென்ற 2 லட்சம் இந்தியர்கள் - என்ன காரணம்?
கடந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவு துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர்
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் எழுத்துபூர்வமாக உறுப்பினர்கள் கேட்கும் கேள்விக்கு துறைசார் அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
நேற்று மாநிலங்களவையில் ஆம் ஆத்மீ கட்சி எம்பி ராகவ் சட்டா வெளியுறவு துறை சார்ந்த கேள்வி ஒன்றை எழுப்பினார். கடந்த ஆண்டு எத்தனை இந்தியர்கள் இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடு சென்றுள்ளனர். இதற்கு என்ன காரணம் இதை சரி செய்ய அரசு எடுத்துள்ள முயற்சிகள் என்ன என கேள்வி எழுப்பினார்.
இந்திய குடியுரிமை
இதற்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் எழுத்துபூர்வமாக பதில் அளித்திருந்தார். அதில் "கடந்த 2023 ம் ஆண்டு இந்திய குடியுரிமை வேண்டாம் என குடியுரிமையை துறந்து விட்டு 2,16, 219 பேர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
குடியுரிமையைத் துறப்பதற்கு உள்ள காரணங்கள் அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். உலகில் எங்கு வேண்டுமானாலும் தொழில் புரியலாம் என்பதை இந்திய அரசு அங்கீகரித்துள்ளதால், பலரும் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்கின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் வெற்றிகரமான, வளமான மற்றும் செல்வாக்குமிக்க இந்தியர்கள் இந்தியாவுக்கு சொத்தாகத் திகழ்கின்றனர்,” என தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் உயிரிழப்பு
2022 ஆம் ஆண்டில் 2,25,620 பேரும், 2021ஆம் ஆண்டில் 1,63,370 பேரும், 2020ஆம் ஆண்டில் 85,256 பேரும், 2019 ஆம் ஆண்டில் 1,44,017 பேரும் தங்களின் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர்.
2019ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 6,75,541ஆக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் 13,35,878 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில், விபத்துகள் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 41 நாடுகளில் உள்ள 633 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். .