தமிழகத்தில் இன்னும் 4 நாளுக்கு மழை ; இந்தப் பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்
அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம்
தமிழகத்தில் 17 ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் கூறுகையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி,மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஜூன் 17-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை
சென்னை மற்றும் புறநகரில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவில் இடி, மின்னலுடன் லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே நேரம் அடுத்த நாட்களுக்கு சில இடங்களில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5ம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகள்
தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.