தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் 'இன்ப்ளுயன்ஸா' - குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம்!
தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இன்ப்ளுயன்ஸா
தமிழகத்தில், ஆர்.எஸ்.வி., என்ற சுவாசப்பாதை தொற்று மற்றும் இன்ப்ளுயன்ஸா தொற்று பரவி வருகிறது. இருமல், தொண்டை ஒவ்வாமை, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலைவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
பருவ நிலை மாற்றத்தால், ஜனவரி மாதம் முடிந்தும், இன்ப்ளுயன்ஸா தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், இன்ப்ளுயன்ஸா பாதிப்புகளுடன் வருவோருக்கு அலட்சியம் காட்டாமல், இன்ப்ளுயன்ஸா பரிசோதனை செய்ய வேண்டும். அறிகுறிகள் மற்றும் நோயின் தீவிரத்தை பொறுத்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
தடுப்பூசி அவசியம்
குறிப்பாக, முதியோர், கர்ப்பிணியர், இணை நோயாளிகள், ஆறு மாதம் முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, 'இன்ப்ளுயன்ஸா' தடுப்பூசிகளை செலுத்த வேண்டும். நோயின் தீவிரத்தை பார்த்து, 'ஓசல்டாமிவிர்' என்ற தடுப்பு மருந்து வழங்கலாம். பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்துதல் அவசியம்.
அடிக்கடி கைகளை சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் போது, முகக்கவசம் அணிதல் அவசியம். முகம், கண்கள், மூக்கு பகுதியை அடிக்கடி தொடுவதை தவிர்க்க வேண்டும். இடைவெளி விட்டு பேசுவதும், இருமும் போதும் கைக்குட்டை பயன்படுத்துவது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.