பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - இளைஞரை அடித்து துவைத்த பொதுமக்கள்
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்ட சம்பவம் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் போலீசார்
25 வயது மதிக்கத்தக்க பெண் காவலர் சென்னை எழும்பூர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். வழக்கமாக பணி முடித்து விட்டு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயில் மூலம் பழவந்தாங்கல் செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் பழவந்தாங்கல் ரயில் நிலைய நடைமேடையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து, கழுத்தில் இருந்த ஒன்றரை பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டதுடன் கீழே தள்ளி பாலியல் தொல்லைக் கொடுக்க முயன்றுள்ளார்.
பொதுமக்கள் சரமாரி தாக்குதல்
பெண் காவலர் கூச்சலிட்டதும், அங்கிருந்த மற்ற பயணிகள் அந்த மர்ம நபரைத் துரத்தி பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் அந்த இளைஞர் மயக்கமடைந்ததில் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த சத்திய பாலு என்பது தெரியவந்தது.
மேலும் இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து சத்திய பாலு மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.