இனி ஆன்லைன் கேம் விளையாட முடியாது? ஆதார் கட்டாயம் - தமிழக அரசு அதிரடி
இனி ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு ஆதார் கட்டாயம் வேண்டும் என தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
ஆன்லைன் கேம்
தமிழகத்தில் மட்டும் 30க்கு மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. குழந்தைகளும் பெற்றோர்களின் செல்போன்களை எடுத்து அவர்களுக்கே தெரியாமல் பணம் செலுத்தி கேம் விளையாடுகிறார்கள்.
இதனை தடுக்க பலரும் கோரிக்கை வைத்த நிலையில் ஆன்லைன் விளையாட்டை முறைப்படுத்துவது, விளையாட்டு அளிக்கும் நிறுவனங்களை கண்காணிப்பது போன்ற பணிகளுக்காக தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தை உருவாக்கியது.
இரவில் தடை
இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்துவது, சிறுவர்-சிறுமிகளை அதில் இருந்து எப்படி மீட்டெடுப்பது தொடர்பான பரிந்துரைகளை தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் தமிழக அரசிடம் வழங்கியுள்ளது.
இதன்படி, இரவு 12 மணி முதல் 5 மணி வரை கேம் விளையாட தடை விதிக்கப்பட இருக்கிறது. மேலும் ஒரு நாளில் 4 மணி நேரம் வரை மட்டுமே கேம் விளையாட அனுமதியானது வழங்கப்படும்.
ஆதார் கட்டாயம்
தினசரி மற்றும் மாதத்திற்கு 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மட்டுமே கேமில் செலுத்தி விளையாட அனுமதி வழங்கப்படும். இது மட்டுமல்லாமல் ஆதார் கார்டுகளை இணைத்தால் மட்டுமே கேம் விளையாட அனுமதி வழங்கப்படும்.
மேலும் கேம்மிற்குள் செல்லும் போது பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு வரும் OTPயை உள்ளீடு செய்தால் மட்டுமே அவர்களால் விளையாட முடியும். இது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட நேர இடைவெளியில் எவ்வளவு நேரம் தங்களது குழந்தைகள் கேம் விளையாடிக்கொண்டிருந்தனர் என்பதையும் பெற்றோரின் செல்போனுக்கு நோட்டிபிகேஷனாக செல்ல உள்ளது.
இதன் மூலம் குழந்தைகளின் செயல்பாடுகளை பெற்றோர்கள் கண்காணிக்கலாம். ஏற்கனவே சீனா, தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் இது போன்ற நடைமுறைகள் உண்டு.