மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் - தமிழக அரசு உறுதி

Government of Tamil Nadu Thangam Thennarasu Tirunelveli
By Karthikraja Jul 28, 2024 01:02 PM GMT
Report

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான உதவிகள் செய்து தரப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்

திருநெல்வேலி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 8,373 ஏக்கர் நிலப் பரப்பில் பரவி விரிந்துள்ளது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். இந்தத் தேயிலைத் தோட்டத்தை வாடியா குழுமத்திற்குச் சொந்தமான ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (பி.பி.டி.சி.எல்) என்ற நிறுவனம் நடத்தி வருகிறது. 

majolai estate latest photo

பி.பி.டி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 99 ஆண்டு குத்தகை காலம் 2028-ம் ஆண்டு முடிவடைகிறது. மேலும் இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அரசு அறிவித்துள்ளதால் தற்பொழுதே இதில் பணியாற்றும் ஊழியர்களை கட்டாய விருப்ப ஓய்வு கொடுத்து வெளியேறும் முயற்சியில் நிறுவனம் இறங்கியுள்ளது. 

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்க மறுத்த தமிழக அரசு!

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்க மறுத்த தமிழக அரசு!

அரசு உதவி

மாஞ்சோலையிலே கடந்த 5 தலைமுறைகளாக இந்த மக்கள் வசித்து வந்ததால் அவர்களுக்கு வேறு எங்கும் சொந்த இடமோ, சொந்த வீடோ கிடையாது. அவர்களுக்கு தோட்டத் தொழில் தவிர எந்த தொழிலும் தெரியாததால் எஸ்டேட்டை விட்டு வெளியேற்றி விட்டால் அவர்கள் அகதிகள் போல ஆகிவிடுவார்கள். எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

thangam thennarasu

இந்நிலையில் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டு மனை, வீடுகள், வாழ்வாதாரத்துக்கான உதவிகள் அனைத்தும் செய்து தரப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இலவச வீடு

இதன்படி தேயிலை தோட்டத் தொழிலாளர்களை விருப்ப ஓய்வில் செல்ல நிறுவனம் கட்டாயப்படுத்தினால் அவர்கள் தொழிலாளர் நலத்துறையில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார வசதிகள் வழங்கும் பொருட்டு கிராமப் பகுதிகளில் வீடற்ற தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Skill Development Corporation) மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மையம் (Tamil Nadu State Rural Livelihood Mission) மூலம் திறன் பயிற்சி வழங்கப்படும். இந்த திறன் பயிற்சி முடிப்பவர்களுக்கு தனியார் துறையில் உரிய வேலைவாய்ப்புப் பெற்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். 

manjolai estate labours

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அவர்கள் விரும்பும் அரசுப் பள்ளியில் அவர்களைச் சேர்க்கவும், அரசு விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். 

தொழில் தொடங்க கடனுதவி

மேலும், சிறிய பால் பண்ணைகள் அமைத்தல், கறவை மாடுகள், ஆடுகள் வாங்குதல் ஆகியவற்றிற்காக ஆவின் நிறுவனம் மற்றும் கூட்டுறவுத் துறை மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். பெண்களுக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ரூ.1.50 இலட்சம் வரை சிறு கடன்கள் வழங்கப்படும்.

தொழிலாளர்களில், 55 வயதிற்குட்பட்ட பட்டியல் இனத்தைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்க 6% வட்டிச் சலுகையுடன் சுயதொழில் தொடங்க கடன் மற்றும் 35% மானியம் வழங்கப்படும்.

இதர பிரிவுகளைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் (NEEDS) கீழ் 25% மானியம் மற்றும் 3% வட்டி சலுகையுடன் அதிகபட்சமாக ரூ.75 இலட்சம் வரை சுயதொழில் தொடங்க கடன் வழங்கப்படும். எனவும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.