மாஞ்சோலை எனும் சகாப்தம்; முடிவுக்கு வரும் தொழிலாளர்கள் பயணம் - கலங்க வைக்கும் பின்னணி!
திருநெல்வேலி நகரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், தென்காசியிலிருந்து 66 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள இடம் மாஞ்சோலை.
மாஞ்சோலை
சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமான மாஞ்சோலை வனப்பகுதி, மணிமுத்தாறுக்கு மேல் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மிக அழகான தேயிலை தோட்டம். இங்கு பெரிய வாகனங்கள் செல்லமுடியாது. இருசக்கர வாகனத்திலும் போக முடியாது. காரில் மட்டுமே செல்ல முடியும்.
அதற்கும் அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி வாங்க வேண்டியது அவசியம். இந்த பகுதியில் குதிரைவெட்டி, காக்காச்சி உள்ளிட்ட 5 தேயிலை தோட்டங்கள் இருக்கின்றன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4000 அடி உயரத்தில் உள்ள இந்த பகுதிகள் காண்போரை கவர்ந்து இழுக்கின்றன. இரவில் இங்கு தங்கமுடியாது.
ஜமீன் வசம்
திருவனந்தபுரம் திருவிதாங்கூர் இளவரசர் மார்த்தாண்ட வர்மருக்கும், அவரது உறவுக் காரரான எட்டு வீட்டுப் பிள்ளை என்பவருக்கும் 1700களில் தகராறு ஏற்பட்டது. இதில் எட்டு வீட்டில் பிள்ளைமார் ஆட்சியை கைப்பற்றினர். அப்போது இளவராக இருந்த அரச வாரிசான சேரன் மார்த்தாண்டவர்மன், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எண்ணி தாய் இராணி உமையம்மாவின் பாதுகாப்பில் காட்டுக்குள் தலைமறைவாக வசித்து வந்தார்.
அப்போது அவர்களுக்கு சிங்கம்பட்டி ஜமீன்தாரின் அறிமுகம் கிடைத்துள்ளது. தொடர்ந்து இவரது உதவியை இராணி உமையம்மா நாடியுள்ளார். இதனையடுத்து ஜமீன் உதவியோடு, பெரும்படையுடன் சென்று போரிட்டு, 1730ல் ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார். இதில் உதவ புயல்கையில் சிங்கம்பட்டி இளவரசர்நல்லபுலிக்குட்டி உயிரிழந்தார். எனவே, மார்த்தாண்டவர்மன், 74 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அவருக்காக வழங்கினார். அதிலிருந்து அந்தப் பகுதி சிங்கம்பட்டி எஸ்டேட் என அழைக்கப்பட்டது.
பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன்
சிங்கம்பட்டியின் 32-ஆவது மன்னர், சென்னையில் படித்துக்கொண்டிருந்தபோது, கொலை வழக்கு ஒன்றில் சிக்கினார். இந்த வழக்கிற்கு பணம் அதிகம் செலவானதால், பரிசாக வழங்கப்பட்ட நிலத்தில் சுமார் 8,000 ஏக்கர் நிலத்தை பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு 99 வருடங்களுக்கு குத்தகைக்கு விட்டார்.
அதன்பின், நிறுவனம் மணிமுத்தாறு, காரையாறு மற்றும் பாபநாசம் அணைப்பகுதிகளுக்கு மேல் அமைந்திருக்கும் வனப்பகுதியில் 3350 முதல் 4920 அடி வரையிலான உயரத்தில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட்டுகளை உருவாக்கியது. அங்கு தேயிலை, காபி, ஏலக்காய், கொய்னா, மிளகு போன்றவற்றைப் பயிரிட ஆரம்பித்தது.
வரலாற்றில் கருப்பு பக்கம்
சுதந்திரத்திற்குப் பின் ஜமீன் வசமிருந்த இரயத்துவாரி நிலங்கள் அரசுடைமையாக்கப்பட்டது. ஆனால் பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேஷன் நிறுவனம் அரசுடன் ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பித்துக் கொண்டது. எஸ்டேட் பணிகளுக்காகத் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கங்காணிகள் எனப்படும் தரகர்கள் மூலமாக கூலி வேலைக்கு ஆட்கள் அழைத்து வந்து ஈடுபடுத்தியது.
அவர்களின் வாரிசுகள் பலர் நான்கு தலைமுறைகளாக அங்கேயே கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில், 70 ரூபாயிலிருந்து 100 ரூபாய் கூலி உயர்வு, பெண்கள் பணியில் இருக்கும் போது மகப்பேறு காலங்களில் விடுப்பு, எட்டு மணி நேர வேலை, மேலும் முன்பு கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்களின் விடுதலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான தமாகா, இடது சாரிக் கட்சிகள், இஸ்லாமிய அமைப்பினர் தலைமையில் 1999ல் போராட்டம் நடந்தது.
காப்புக்காடு
இதில், காவல்துறைக்கும், மக்களுக்கும் மோதல் ஏற்படவே, போலீசார் திடீரென தடியடி நடத்தினர். பலர், போலீஸ் அடிக்கு பயந்து தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்து தப்பிக்க முயன்றனர். இந்த கோர சம்பவத்தால் ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர். 500 பேர் காயமடைந்தனர். அந்த போராட்டம் வரலாற்றில் கருப்பு பக்கமாக இன்று வரை இருந்து வருகிறது. தொடர்ந்து, எஸ்டேட் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட வனம் 'காப்புக்காடாக' தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு வனச் சட்டத்தின்படி, உயர்த்தப்பட்ட வரியின் அடிப்படையில் நிலுவையிலுள்ள குத்தகைத் தொகை மற்றும் மீதமுள்ள குத்தகை காலத்திற்கான வரிப்பணத்தை முன்கூட்டியே பி.பி.டி.சி நிர்வாகம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்த தவறினால் மீதமுள்ள ஆண்டுகள் எஸ்டேட் பகுதியைப் பயன்படுத்தவும், எஸ்டேட் தொடர்ந்து நீடிக்கவும் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தொழிலாளர்களின் மறுவாழ்வு?
மேலும், புலிகள் காப்பகத்தில் 74,000 ஏக்கர் வனப்பகுதியில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பில் மட்டுமே தேயிலைத்தோட்டம் அமைந்துள்ள நிலையில், இந்த தேயிலை தோட்டம் இருப்பது சுற்றுச்சூழலுக்குப் பேராபத்து என அறிவித்த வனத்துறை, பல்லுயிர்ப் பூங்காவை காக்காச்சி எஸ்டேட் பகுதியில் அமைத்திட அறிக்கை வெளியிட்டது. எனவே, பி.பி.டி.சி நிறுவனம் குத்தகைக் காலம் 2028 வரை இருப்பினும், இந்தப் பகுதி மீதான தனது கட்டுப்பாட்டினை விலக்கிக்கொள்ள முடிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில், மாஞ்சோலையில் உள்ள தொழிலாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது, தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்து கவனம் செலுத்த தமிழக அரசுக்கு தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது.