திருநெல்வேலியின் காணத்தவறாத இடங்கள் - போனீங்கனா மிஸ் பண்ணாம பார்த்து எஞ்ஜாய் பண்ணுங்க!
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலி பழமை சிறப்புவாய்ந்த மாவட்டம். இங்கு, கோவில்கள், அருவிகள், அணைகள் வனவிலங்கு சரணாலயம் என பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. அதில் சிலவற்றை இங்கே காணலாம்...
நெல்லையப்பர்-காந்திமதி
திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருக்கோவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மின தலமாகவும் இருந்து வருகிறது. திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் இதுவும் ஒன்று. மற்றொரு புகழ் பெற்ற அம்சம் இந்த இருட்டுக் கடை. கோவிலுக்கு எதிர்புறமே இந்தக் கடை அமைந்துள்ளது.
பாபநாசம்
பாபநாசம் என்பதன் பொருள் பாவங்களை நிவர்த்தி செய்வது என்பதாகும். இங்கு குளித்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. பாபநாச அணையும் பெரிதாக பேசக்கூடிய ஒரு இடம்தான். திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கான முக்கிய ஆதாரமாக உள்ளது.
மணிமுத்தாறு
அதன் அருகிலேயே மணிமுத்தாறு அருவி உள்ளது. 25 அடி உயரம் கொண்டது. அருவிக்கு கீழே 80அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்புள்ளது. மேலும், அங்கு பூங்கா, சிலைகள், தோப்பு, செயற்கைக்குகை, கோழிப்பண்ணை, மீன்பண்ணை, விதைப்பண்ணை முதலியவை இருக்கின்றன.
முண்டந்துறை
களக்காடு மற்றும் முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் முக்கிய சுற்றுலா தலமாகத் திகழ்கிறது. இங்கே புள்ளி மான்கள், சிங்கவால் குரங்குகள், யானைகள், புலிகள் ஆகியவை நிறைய காணப்படுகின்றன. இவையெல்லாம் அருகருகே உள்ள அவசியம் காணக்கூடிய இடங்கள்.
மாஞ்சோலை
மாஞ்சோலை அழகிய மலைவாசஸ்தலம் ஆகும். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதிக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலம் ஒரு முக்கிய தேயிலைத் தோட்டப் பகுதியாகும். மாஞ்சோலை ஒரு விசித்திரமான நகரமாகும், இது அருகிலுள்ள பகுதிகளை விட குறைவான மக்கள்தொகை கொண்டது, ஆனால் பசுமை மற்றும் அழகான மலை சரிவுகளுக்கு மத்தியில் சில நாட்கள் கழிக்க சிறந்த இடம்.
குற்றாலம்
குற்றாலம் அருவி, அல்லது குற்றாலம்/குத்தாலம் அருவி, திருநெல்வேலிக்கு அருகில் தென்காசி மாவட்டத்தில் உள்ளது. பசுமையான காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் சரியான சுற்றுலாத் தலமாக அமைகிறது. மழைக்காலத்தில் நீங்கள் இந்த இடத்திற்குச் சென்றால், கம்பீரமான நீர்வீழ்ச்சியை அதன் முழு கொள்ளளவிலும் நீங்கள் காண முடியும்.
கூந்தன் பறவைகள் சரணாலயம்
கூந்தன் பறவைகள் சரணாலயத்தில் 43 இனத்தைச் சேர்ந்த பறவைகள் வருகின்றன. கூந்தன்குளம் பறவைகள் காப்பகம் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நான்குநேரி வட்டத்தில் உள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 10,000க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வலம் வருகின்றன.
தோரணமலை
நாம் அடுத்து பார்க்க இருப்பது தோரணமலை தான். இதற்கு மேலே உள்ள முருகன் கோவில் 2000ம் ஆண்டு பழமையானது. இது நெல்லையிலிருந்து 60கி.மீ தொலைவில் உள்ளது. குற்றாலத்திலிருந்து 16கி.மீ தொலைவில் உள்ளது. முக்கைய இடங்கலின் இதுவும் ஒன்றாக உள்ளது.
திருக்குறுங்குடி
திருக்குறுங்குடி என்பது ஒரு மலைக்கிராமம். இதன் அடிவாரத்தில் உள்ள பெருமாள் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும், இங்கு மலைமேல் நம்பி என்ற கோவிலும், நம்பியாறு எனும் அருவியும் உள்ளது. அதிகமான பக்தர்கள் இங்கு அவ்வப்போது சென்றுவருவது வழக்கம்.
கிருஷ்ணாபுரம்
கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது வெங்கடாசலபதி கோவில். இக்கோவிலில் உள்ள கலையழகு மிளிரும் சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. நம் முன்னோர்கள் சிற்பக்கலையில் அடைந்திருந்த உன்னத நிலையும், தொழில் நுட்பத்திறனும் காண்போரை பிரமிக்க வைக்கும். வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும். இங்குள்ள எழில் கொஞ்சும் சிற்பங்களில் தெரியும் முகபாவங்கள், கை மற்றும் கால்களில் ஓடும் நரம்புகள் கூட தெளிவாகத் தெரியும்படியான நுணுக்க வேலைப்பாடுகள், தத்ரூபமாக காணப்படும் ஆடை அணிகலன்கள் ஆகியவற்றை கவனிக்கும்போது, இவை சிற்பங்களா அல்லது உயிர் பெற்று வந்து நிற்கும் நிஜ உருவங்களா என்று நம்மை எண்ண வைக்கும். தட்டினால் இனிய ஓசை எழுப்பும் இசைத் தூண்கள், ஒரு சிற்பம் பற்றியுள்ள வளைவான வில்லின் ஒரு முனையில் ஒரு குண்டூசியைப் போட்டால் மற்றோரு முனை வழியாக தரையில் விழுவது போன்ற நேர்த்தியான வடிமைப்பு கொண்ட சிற்பங்கள் நமது சிற்பிகளின் திறமையை உலகுக்கு பறை சாற்றுகின்றன.