ரங்கசாமி ஒரு டம்மி....பம்மாத்து ஆட்சி செய்யும் பாஜக - புதுச்சேரியில் முதல்வர் முக ஸ்டாலின் கடும் விமர்சனம்
தேர்தல் பரப்புரைக்காக புதுச்சேரி சென்ற முதல்வர் முக ஸ்டாலின் பாஜக மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
முதல்வர் பிரச்சாரம்
தமிழக முதல்வரும், திராவிட கழக தலைவருமான முதல்வர் முக ஸ்டாலின் புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வைத்திலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் பேசியது வருமாறு, பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு என்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மண்ணிற்கு வந்துள்ளேன். இந்தியா கூட்டணி வேட்பாளரான விடுதலைப் போராட்ட வீரரின் குடும்பத்தைச் சேர்ந்த வைத்திலிங்கத்திற்கு புதுச்சேரியில் அறிமுகம் தேவையில்லை.
புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காகக் காங்கிரஸ் - திமுக தான் பாடுபட்டிருக்கிறது, ஆனால் புதுச்சேரியை எப்படியெல்லாம் பின்னோக்கிக் கொண்டு செல்லலாம் என்று பாஜக செயல்படுகிறது. மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து தராமல், அந்த வசதிகள் இல்லை என்று காரணம் காட்டி ரேஷன் அரிசியைத் தடை செய்தார்கள்.
கைப்பாவையாக....
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக இருந்த நாராயணசாமி அவர்களுக்கு ஒத்துழைக்காமல் புதுச்சேரி நிர்வாகத்தைச் பாஜக சீர்குலைத்தது. அதற்கு காரணம் இருந்த துணை நிலை ஆளுநர் ஐபிஎஸ் கிரண் பேடி.
இப்படி, தமிழ்நாட்டிலும் ஒரு ஆளுநர் இருக்கிறார். காவல்துறையில் பதவிக்காலம் முடிந்ததும் இவர்களை ஆளுநர்களாக்கி, அரசியல்சட்டத்தை மீறி பாஜகவின் ஏஜெண்டுகள் போன்று செயல்படுகிறார்கள். ஆளுநர்கள் தொல்லை, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமில்லை புதுச்சேரியில் ஆளும் பாஜக கூட்டணி கட்சி முதலமைச்சர் ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடி கொடுக்கிறது.
புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசத்தை கிராமப் பஞ்சாயத்து போன்று ஆக்கிட வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்படுகிறது. கூட்டணி அரசு இருந்தாலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்காமல் தன்னுடைய கைப்பிடியிலேயே வைத்திருக்கிறது பாஜக. அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கிறார் புதுச்சேரி முதலமைச்சர்.
இந்த அவலங்கள் எல்லாம் தீர, புதுச்சேரி முன்னேற, மக்களின் வாழ்க்கையில் புதிய மலர்ச்சி ஏற்பட பாஜக வீட்டுக்குப் போக வேண்டும். இந்தியா கூட்டணி தில்லியில் அமர வேண்டும். காங்கிரஸ் - திமுக நாட்டு நலன்களில் அக்கறை கொண்டு வாக்குறுதிகளை அளிக்கிறது.
ரிப்போர்ட் கார்டு எங்கே?
பத்தாண்டு காலம் ஆட்சிசெய்த பிரதமர் மதத்தின், சாதியின் பெயரால் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் சமூகநீதியைப் பாதுகாப்பேன் என்றோ, இடஒதுக்கீட்டை செயல்படுத்துவேன் என்றோ சொல்லவில்லை. கடந்த பத்தாண்டுகால மோடி ஆட்சியில் புதுச்சேரிக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்தான் அதிகம்!
துணைநிலை ஆளுநர்களை வைத்து, அரசியல் கூத்துகளை அரங்கேற்றிக் கொண்டு இருந்தார்கள். கிரண் பேடிக்கு பிறகு, தமிழிசை வந்தார்கள். காங்கிரஸ் அரசிடம் ஏதோ ரிப்போர்ட் கார்டெல்லாம் கேட்டாரே பிரதமர்....பத்தாண்டுகால பாஜக ஆட்சி ரிப்போர்ட் கார்டு எங்கே?
வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி ரிப்போர்ட் கார்டு வேண்டாம். நாங்கள் கேட்பது, ஒரிஜினல் ரிப்போர்ட் கார்டு. பாஜகவால் புதுச்சேரி அடைந்த நன்மை என்ன? சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு, சிறுமி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டது.
ரங்கசாமி அவர்களை டம்மியாக உட்கார வைத்துவிட்டு, பாஜக பம்மாத்து ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறது. ரங்கசாமி தலைமையிலான என் ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் இங்கே மூடப்பட்டிருக்கிறது. தேர்தல் வந்தால்தான் ரங்கசாமிக்கு மாநில அந்தஸ்து என்ற ஞானோதயம் வரும். கடந்த 3 ஆண்டுகளாக அதற்காக என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.