தேர்தல் அரசியலுக்கு வந்த தமிழிசை சௌந்தரராஜன் - இது வரை தேர்தல் வரலாறு என்ன..?
தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தமிழிசை.
தமிழிசை சௌந்தராஜன்
தெலுங்கானா மாநில ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பதவியை மக்கள் பணியாற்ற நேரடி தேர்தல் அரசியலுக்கு வந்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழகத்தில் பாஜகவின் பிராதன முகங்களில் முக்கியமானவர்.
2019-ஆம் ஆண்டு தெலுங்கானா மாநில ஆளுநராகவும், 2021-ஆம் ஆண்டில் புதுச்சேரிக்கு துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் நேற்று தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், நேரடி தேர்தல் அரசியலுக்காக ராஜினாமா செய்தததாக தெரிவித்தார்.
தேர்தல் அரசியல்
இது வரை தமிழிசை சௌந்தரராஜனின், தேர்தல் அரசியல் வரலாற்றை தற்போது காணலாம்.
முதல் முதலில் தமிழிசை 2006-ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தின் இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கினார். இந்த தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்ட பாஜகவின் தமிழிசை 5,343 வாக்குகளை பெற்று 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் திராவிட கட்சிகளின் கூட்டணி இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் போட்டியிட்டது. வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை இந்த தேர்தலில் 7,048 வாக்குகளை பெற்று 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
மீண்டும் 2016-ஆம் ஆண்டில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட அவர், 19,167 வாக்குகளை பெற்று 3-வது இடமே பெற்றார்.
இதற்கிடையில் 2009 ஆம் ஆண்டின் மக்களவை தேர்தலில் வடசென்னையில் தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை இந்த தேர்தலிலும் தோல்வியையே பெற்றார். 23,350 வாக்குகளை பெற்ற அவர், 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
மீண்டும் 2019-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழிக்கு எதிராக களமிறங்கிய தமிழிசை 215,934 வாக்குகளை பெற்று தோல்வியே அடைத்தார்.
தொடர்ந்து தேர்தல் அரசியலில் தோல்வியுற்றாலும் தமிழக பாஜகவின் முக்கிய முகமாக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் இம்முறை எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.