தேர்தல் அரசியலுக்கு வருகிறார் தமிழிசை...? ஆளுநரா..எம்.பி'யா?
வரும் நாடாளுமன்ற தேர்தலில்தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் தமிழிசை
தமிழிசை சௌந்தரராஜன் - தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர், துணைத் தலைவர், தேசிய செயலாளர், மாநில தலைவர் என பல பதவிகளை வகித்துள்ளார். 1999-ஆம் ஆண்டு முதல் கட்சியில் தொடர்ந்து பயணித்து வரும் தமிழிசை, தமிழ்நாட்டில் பாஜக வளர முக்கிய பங்காற்றியவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
2006 சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி, 2011-ஆம் ஆண்டில் வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதே போல, 2009-ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் வட சென்னை தொகுதி, 2019-இல் அதிமுக கூட்டணியில், தூத்துக்குடியில் கனிமொழியிடம் தோல்வியடைந்தார்.
தேர்தல் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தமுடியாமல் போன தமிழிசை சௌந்தரராஜனுக்கு பாஜக ஆளுநர் பதவியை அளித்து அழகு பார்த்தது.
தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வுடன் தொடர்ந்து முரணான போக்கில் நீடித்து வந்த தமிழிசை, அவ்வப்போது தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்தும் பேசி சலசலப்புகளை ஏற்படுத்தி வந்தார்.
மீண்டும் தேர்தல் அரசியலில் தமிழிசை களமிறக்கப்படுவாரா? என்று கேள்விகள் அவ்வப்போது எழுந்து வரும் நிலையில், தற்போது அது அழுத்தமாக அரசியல் வட்டாரங்களில் ஒலிக்க துவங்கியுள்ளது.
இதற்கு கருத்துக்களுக்கு பலம் சேர்க்கும் வகையில், டெல்லி சென்ற தமிழிசை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்தும் பேசியுள்ளார்.
அதன் காரணமாகவே அவர் தேர்தலில் இம்முறை மீண்டும் போட்டியிட போகிறாரா..? என்ற கருத்துக்கள் தமிழ்நாடு அரசியலில் அதிகமாக எழுந்துள்ளது.