தமிழிசையின் zoom மீட்டிங் பிரச்சாரம்; திடீரென பரவிய ஆபாச புகைப்படம் - மிரண்டோடிய பெண்கள்!
ஜூம் மீட்டிங் மூலம் தமிழிசை வாக்குகேட்டபோது திடீரென ஆபாசப் புகைப்படங்கள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
zoom மீட்டிங் பிரச்சாரம்
இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் தேதி நெருங்கியுள்ளதால் தமிழகத்தில் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகளும் முக்கிய தலைவர்களும் பல தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குகேட்க அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாக்காளர்களுடன் கலந்துரையாடும் வகையில் ஜூம் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று இரவு நடந்தபோது வாக்காளர்களிடம் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்தநிலையில் யாரோ விஷமிகள் ஆபாச புகைப்படங்களை அதில் காட்டியதாக கூறப்படுகிறது.இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் அதிர்ச்சியடைந்து பாதியில் சென்றனர். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் வருத்தமும் அதிர்ச்சியும் கலந்த விளக்கம் அளித்துள்ளார்.
அப்போது, " அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாக்காளர்களிடத்தில் எனக்கு ஆதரவு தருமாறு கேட்க திட்டமிட்டேன். அவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை. அதனால் இணையவழியில் சந்திக்கும் வகையில் ஜூம் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் குறித்து தெரிந்து கொள்ளவும் முடிவு செய்திருந்தேன்.
தமிழிசை வருத்தம்
அது குறித்தும் முன்கூட்டியே தெரிவித்திருந்தோம். இதில் பலர் ஆர்வமாக கலந்து கொண்டனர். மீட்டிங் தொடங்கிய சில நிமிடங்களில் ஆபாசமான படங்கள் அதில் பகிரப்பட்டன. இதன் மூலம் வேட்பாளரும், வாக்காளர்களுக்கும் இடையிலான இணைப்பை துண்டிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்காத வகையிலும், நான் தாமரை சின்னத்துக்கு ஆதரவு கேட்கக்கூடாது என்ற மோசமான நோக்கிலும் எதிர்க்கட்சியினர் இதைச் செய்தனர்.குறிப்பாக தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுகவை இதற்கு நான் நேரடியாக குற்றம் சுமத்துகிறேன்.
இது கேவலமான அரசியல். இதன் மூலம் எங்களுக்கும், மக்களுக்குமான தொடர்பை துண்டிக்க முடியாது. பெண்கள் இணையவெளியில் சுதந்திரமாக தமிழகத்தில் பேசக்கூட முடியவில்லை. இதை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும். அரசியலைத் தூய்மைப்படுத்த நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம்.
நேர்மையான அரசியல் செய்வது அவசியம். இந்த அதிர்ச்சிகர செயலுக்கு நான் வருந்துகிறேன். நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்து இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்' என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.