”ப” வகுப்பறை; முதல்ல இதை செய்ங்க.. அரசை விளாசிய தமிழிசை!
'ப' வகுப்பறை மாணவர்களின் உடல்நலனுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
'ப' வகுப்பறை
தமிழகத்தில் வாய்ப்பு உள்ள பள்ளிகளில், 'ப' வடிவில் இருக்கை வரிசையை மாற்றி அமைக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதனால் கழுத்து வலி ஏற்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து, உத்தரவு பிறப்பித்த அதே நாளிலேயே 'ப' வடிவில் மாற்றி அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ," தமிழக பள்ளிகளில் வகுப்பறைகளில் "ப" வடிவ இருக்கை அமைப்பை அமல்படுத்தும் தமிழக அரசு முதலில் தமிழகத்தில் கிராமப்புற பள்ளிகளில் அடிப்படை கட்டுமான வசதிகள் இல்லை. கழிப்பறைகள் இல்லை, கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை குடிக்க தண்ணீர் இல்லை.
இதை முதலில் சரி செய்ய வேண்டும் எங்கேயோ பார்த்து "ப" வடிவ இருக்கை அமைப்பதுதான் எங்கள் முன்னுரிமை என்று இல்லாமல் எப்பொழுதும் இருக்கையை பற்றியே பேசி சிந்தித்துக் கொண்டிருக்கும் ஆளும் கட்சி அமைச்சராக மட்டுமே இல்லாமல் மாணவர்களுக்கு வசதியாக கல்வி பயில கவனம் செலுத்த வேண்டும்.
தமிழிசை விமர்சனம்
இன்னும் மரத்தடியிலும் மைதானங்களிலும் கல்வியை சொல்லிக் கொடுக்கும் அவலம் இன்னும் தமிழ்நாட்டில் தொடர்கிறது என்பது வேதனை. மாணவர்களை வகுப்பறையில் "ப" வடிவில் அமர வைக்கும் பொழுது மருத்துவ ரீதியாக அவர்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகளை மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
தொடர்ந்து கழுத்தை திருப்பி பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு கழுத்து வலி, கண் பார்வை, கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை மருத்துவர் என்ற முறையிலே அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
கேரளா சினிமாவில் காட்டப்பட்டதை இங்கே காப்பியடிப்பது விட்டு விட்டு அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பையும் பள்ளிகள் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதிலும், தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக நியமனப்படுத்த வேண்டும் என்று
போராடும் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளையும் முன்னுரிமை கொடுப்பதை விடுத்துவிட்டு பெரும் விளம்பர மாடல் அரசாக காப்பி அடிப்பதை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.