தமிழகத்தை சேர்ந்தவருக்கு வெளிமாநிலத்தில் அவமானம் என எழுதும் கட்சி பத்திரிக்கை - ஆளுநர் தமிழிசை ஆதங்கம்
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் வெளிமாநிலத்தில் அவமானப்பட்டதாக எழுதும் கட்சி பத்திரிக்கை குறித்து ஆளுநர் தமிழிசை ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
சிலை திறப்பு
கும்பகோணத்தில் உலகோத்தால் ஆன நடராஜர் சிலையை திறப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இரண்டு மாநில ஆளுநராக எனது பணியை சிறந்த முறையில் உண்மையாக செய்து வருகிறேன். வருங்காலத்தில் தமிழகத்தில் இறைவன் எனக்கு எந்த மாதிரியான பணிகளை வழங்க இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. தமிழகத்தில் இருந்து அரசியல் ரீதியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரக்கூடிய அழைப்புகளுக்கு ஒரு சகோதரத்துவத்துடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன்.
தமிழிசை சௌந்தர்ராஜன்
இன்று இரு மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றி வருகிறேன். வரும் காலத்தில் ஆண்டவரும், ஆண்டு கொண்டிருப்பவர்களும் என்ன பணி வைத்துள்ளார்கள் என்பது எனக்கு தெரியாது. தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு கட்சி பத்திரிக்கை நான் அவமதிக்கப்பட்டதாக எழுதி உள்ளார்கள். நான் அவமதிக்கப்படவில்லை. எதை பார்த்தும் அலரவும் இல்லை.
மரியாதை கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் எனது பணியை நான் தொடர்ந்து செய்வேன். ஒருவரை வரவேற்பது பாரதத்தின், தமிழகத்தின், தெலுங்கானாவின் கலாச்சாரம். அது தெலுங்கானாவில் கடைப்பிடிக்கப்படவில்லை என மக்களுக்கு கூறுவது தான் என் நோக்கம். ஆளுநராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தெலுங்கானாவில் நடந்த நல்லதையும் தெரிவித்தேன்.
அரசியலாக்க கூடாது
சரியாக நடக்காததையும் தெரிவித்தேன். புதிய கல்வி கொள்கையை தெலுங்கானாவில் அமல்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து துணை வேந்தர்களையும் அழைத்து கூட்டங்கள் நடத்தி அதை அமல்படுத்த கூறியிருக்கிறேன். புதிய கல்வி கொள்கை என்பது பல்வேறு பணிகளுக்கு பின்னால் உருவாக்கப்பட்டது.
அதில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம். ஆனால் தேசிய கல்வி கொள்கையையே ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கூறுவது சரியல்ல, இதை அரசியலாக்க கூடாது. அனைவருக்கும் உலக அளவிலான கல்வி வழங்க வேண்டும் என்பது தான் தேசிய கல்வி கொள்கை. அதை முழுவதுமாக படித்து விட்டு எதிர்க்க வேண்டும்.
குழந்தைகள் மேம்பாட்டுக்கு உதவ வேண்டும் என்பதற்காக தான் 3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என கல்வி கொள்கையில் உள்ளது. அந்த தேர்வு அறிவிப்பை திடீரென அறிவிக்கவில்லை பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரிடம் கலந்தாலோசித்து தான் அறிவித்தோம். 3,5,8 ஆம் வகுப்பு குழந்தைகள் தேர்வெழுத தயாராக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.