நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதில்!
தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பதை ஆண்டவனும், ஆண்டுகொண்டிருப்பவரும் முடிவு செய்வார்கள் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெறும் மாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிகழ்வில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் சந்தித்த அவரிடம், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
தேர்தலில் போட்டியா?
அதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன் "நான் எப்போதுமே கூறுவது போல், தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பதை ஆண்டவனும், ஆண்டுகொண்டிருப்பவரும் முடிவு செய்வார்கள்.
இப்போது எனக்கு கொடுக்கப்பட்ட பணியை நான் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு சாதாரண காரியகர்த்தா. எனக்கு கொடுக்கப்படும் பணியை சிறப்பாக சிறப்பாக செய்வேன். மற்ற முடிவுகள் அனைத்தும் ஆண்டவனிடம் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.