வாக்கு சதவீதத்தை குறைக்க சதி; பாஜகவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும் - சீமான் ஆவேசம்!
நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தை குறைக்க சதி நடப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.
கரும்பு விவசாயி சின்னம்
நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இதனையடுத்து வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
ஆனால் நாம் தமிழர் கட்சி வழக்கமாக போட்டியிடும் கரும்பு விவசாயி சின்னம் இந்தமுறை கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஏனெனில் அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஜக்யதா கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சீமான் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நாம் தமிழர் கட்சி என்பது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால், கரும்பு விவசாயி சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கி தர வேண்டும் என அக்கட்சியால் கோர முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும், எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பிப்பதற்காக வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சீமான் ஆவேசம்
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் "தேர்தல் சின்னம் தொடர்பான மனுக்களை தேர்தல் ஆணையம் பெற்று, சின்னம் ஒதுக்கும் நேரம் வரும்போது விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கவேண்டும்.
ஆனால், முதலில் விண்ணப்பித்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை உடனடியாக தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? கேட்டால் அவர் முதலில் விண்ணப்பித்ததாக சொல்கிறார்கள். நாங்கள் 6 தேர்தல்களில் போட்டியிட்டு, கரும்பு விவசாயி சின்னத்தை போராடி மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம்.
இப்போது திடீரென மற்றொருவருக்கு ஒதுக்குவது என்ன நியாயம்? இதில் இங்குள்ள பாஜகவுக்கு எந்த தொடர்பும் இல்லையா? இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்கவில்லை அதற்குள் ஏன் சின்னத்தை ஒதுக்கி கொடுத்தார்கள்?. இதன்மூலம் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதத்தை குறைக்க சதி நடக்கிறது. முதலில் பாஜகவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். தேர்தல் முடிந்த பின் இதுதொடர்பாக வழக்கு தொடருவேன்" என்று தெரிவித்துள்ளார்.