இதை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும்.. அதை கையில் எடுக்குறாங்க - தமிழிசை
இந்தியை வைத்து மட்டும்தான் அரசியல் செய்யமுடியும் என மறுபடியும் கையில் எடுக்கிறார்கள் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன்
கன்னியாகுமரி, வெள்ளிமலை அருகே கொல்லம்விளையில் நடைபெற்ற சமயவகுப்பு மாணவர்களுக்கான வித்யாஜோதி பட்டமளிப்பு விழாவில் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்குமே இந்தியை திணிக்கவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஒரு சிபாரிசு செய்திருக்கிறார்கள். அதில் எங்குமே மாநில மொழியை குறைத்து மதிப்பிடவேண்டும் என்றோ, மாநில மொழியை மீறி இந்தியை கொண்டு வர வேண்டும் என்றோ சொல்லவில்லை.
இந்தி திணிப்பு
இதை வைத்து மட்டும்தான் அரசியல் செய்யமுடியும் என்பதற்காக இதை மறுபடியும் கையில் எடுக்கிறார்கள். தமிழ் தமிழ் என நாம் சொல்கிறோம். இன்றைக்கு மத்திய பிரதேசத்தில் அவர்களின் மாநில மொழியான இந்தியில் மருத்துவக்கல்வி கொண்டு வந்திருக்கிறார்கள்.
நீங்கள் அரசியலுக்காக மட்டும்தான் பேசுகிறீர்கள். தமிழ் மீது அக்கறை இருந்தால் அதுபோல முயற்சி செய்து ஒரு தாய்மொழி மருத்துவக்கல்வியை இங்கு கொண்டுவந்திருக்கலாமே. தேசிய கல்வி கொள்கையில் தாய்மொழி கல்வியை ஊக்கப்படுத்தச் சொல்கிறார்கள்.
அதுதான் அரசியல்..
இதைச் சொன்னால் ஆளுநர் அரசியல் பேசலாமா என்கிறார்கள். இது அரசியல் இல்லை. சமூகத்தின் அவலங்களை எடுத்துச்சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. பிரதமர் திருக்குறள் சொன்னால் திருக்குறள் மட்டும் சொன்னால் போதுமா என்கிறார்கள்.
இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் எத்தனை திருக்குறள் சொன்னார்கள். உங்களுக்கு எவ்வளவு தாய்மொழிப் பற்று இருக்கிறதோ அதே தமிழ்ப்பற்று தமிழிசைக்கும் இருக்கிறது. நியாயப்படுத்தி பேசினால் இந்தி இசை என நீங்கள் பேசுவதை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன்.
நீங்கள் இத்தனை நாள் ஆட்சியில் ஒரு புத்தகம் கொண்டு வந்து தமிழ் மொழியில் மருத்துவக் கல்லூரி கொண்டுவர முடியாதா? என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.