மேடையிலேயே கடுமையாக கண்டித்த அமித் ஷா? உண்மை இதுதான்... தமிழிசை விளக்கம்!
வதந்திகளுக்கு தமிழிசை சவுந்தராராஜன் முற்று புள்ளி வைத்துள்ளார்.
கண்டித்த அமித் ஷா?
ஆந்திர மாநிலத்தின் 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராகிறார். அவருக்கு விஜயவாடா அருகே பதவியேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த பிரம்மாண்ட விழா கடந்த சில நாட்களுக்கு முன் அவர் பதவியேற்றுக்கொண்டார்.
அங்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அதுமட்டுமின்றி, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அமைச்சரானார். மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
மேலும், இந்த விழாவில், புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் கலந்துகொண்டார். முன்னதாக விழா மேடைக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார்.அப்போது அமித் ஷா, தமிழிசையை அழைத்துப் பேசினார்.
தமிழிசை விளக்கம்
தமிழிசை ஏதோ சொல்ல வர, அதை அமித் ஷா மறுப்பது போல் சைகை காட்டி பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் படு வைரலானது. பாஜகவின் உள்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதற்காக, தமிழிசையை அமித் ஷா கண்டித்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது தமிழிசை அதற்கு விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப்பாக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திராவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக சந்தித்தேன். அப்போது அவர் மக்களவைத் தேர்தலில் சந்தித்த சவால்கள் குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அதை நான் விவரித்துக்கொண்டிருக்கும்போது, நேரமின்மையால், மிகுந்த அக்கறையுடன் அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அவர் அறிவுரை வழங்கினார். தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்” என பதிவிட்டுள்ளார்.