COME BACK MODI என சொல்லும் காலம் வரும் - தமிழிசை சௌந்தரராஜன்
மோடியை GO BACK என்று சொன்னவர்கள் வரவேற்க வேண்டிய அரசியல் சூழல் வரும் என தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.
தமிழிசை சௌந்தர்ராஜன்
2007 ஆம் ஆண்டு தமிழக பாஜக அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கின் விசாரணைக்கு ஆஜராக பாஜக கட்சியை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் நீதிமன்றம் வந்திருந்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்பொழுது அவர் பேசியதாவது, "வன்முறை, அரசியலில் எந்த ரூபத்திலும் இருக்க கூடாது என்பது தான் எங்கள் கருத்து. எதிர் கருத்துக்கள் வரலாம். ஆனால் எதிர்வினையாக தாக்குதலாக இருக்க கூடாது. பாஜக வளர்ந்து வரும் கட்சி. எவ்வளவு இடையூறுகளை சந்தித்துள்ளோம் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம். ஆரம்பகாலத்தில் வன்முறைதான் திமுகவின் முறையாக இருந்தது. அந்த முறை மாறியிருக்க வேண்டும்.
GO BACK MODI
கருணாநிதி நாணய வெளியீட்டு விழா மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து நடத்திய விழா. இதில் மாநில அரசின் கோரிக்கையின் பேரில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்துள்ளார். ஆக இது அரசு விழா அரசியல் விழா அல்ல. அரசியல் விழாவில் ஒன்றாக கலந்து கொண்டு இருந்தால் ரகசிய உறவு போன்ற கேள்விகள் வரலாம். அரசு விழாவில் மாநில அரசும் மத்திய அரசும் ஒன்றாக கலந்து கொள்ளும் போது அது அரசியல் விழாவாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

மோடியை GO BACK என்று யாரும் சொல்ல முடியாது. GO BACK சொன்னவர்கள், COME BACK என்று வரவேற்க வேண்டிய அரசியல் சூழல் வரும். எதிர்ப்பு அரசியல் செய்யாமல், பிரதமரோ, முதல்வரோ வந்தால் GO BACK என்று சொல்லாமல் வரவேற்று நல்ல நேர்மறை அரசியல் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.
ஆளுநர் தேநீர் விருந்து கொடுத்தால் முதலமைச்சர் கலந்து கொள்ள வேண்டும். இதை ஒரு அரசு விழாவாக பார்க்க வேண்டும். அரசியல் விழாவாக பார்க்க கூடாது. அன்பு உணர்ச்சியாக பார்க்க வேண்டும். காழ்ப்புணர்ச்சியாக பார்க்க கூடாது" என பேசியுள்ளார்.