ராகுல் காந்தியை அழைக்காததன் காரணம் இதுதான் - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
பாஜகவுடன் ரகசிய உறவுக்கு அவசியம் இல்லை என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் இல்லத் திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்பொழுது உரையாற்றிய அவர், 'முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை போன்று நாட்டில் வேறு எந்த விழாவும் நடந்தது இல்லை.
கருணாநிதியின் புகழுக்கு மகுடம் சூட்டுவது போல் நேற்று நாணயம் வெளியிடப்பட்டது. கருணாநிதியின் நினைவிடத்தை பார்த்து விட்டு இதேபோன்று வேறு எங்கும் பார்த்ததில்லை என்றார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
கலைஞர் நாணய வெளியீட்டு விழா
கருணாநிதியைப் புகழ்ந்து ராஜ்நாத் சிங் பேசியது சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவர் இருக்கிறார். அவர் நேற்று கொடுத்த பேட்டியில், தமிழ், தமிழ் என்று முழங்குகிறார்கள் ஆனால் நாணயத்தில் தமிழ் இல்லை, இந்தியில் இருக்கிறது என கூறியுள்ளார். முதலில் உங்களுக்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும். அல்லது நாட்டு நடப்பு புரிந்திருக்க வேண்டும். அல்லது மண்டையில் மூளையாவது இருக்கணும். அந்த நிகழ்ச்சி எப்படி நடக்கின்றது என்றால் மத்திய அரசு அனுமதி கொடுத்து மத்திய அரசின் மூலமாக நடைபெறும் நிகழ்ச்சி.
ஏற்கனவே மறைந்த எம்ஜிஆர், அறிஞர் அண்ணா என பல பேருக்கு நாணயங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஒருவேளை அந்த நாணயத்தை எல்லாம் எடப்பாடி பழனிசாமி பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். அதை எடுத்து பாருங்கள். எல்லா தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடுகின்ற பொழுது ஒன்றிய அரசு சார்பில் இந்தி, ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே அமைந்திருக்கும்.
ராகுல் காந்தி
ஆனால் அண்ணா அவர்களுக்கு நாணயத்தை வெளியிடுகின்ற பொழுது யாரும் செய்யாத ஒரு அதிசயத்தை கலைஞர் செய்தார். அண்ணாவுடைய தமிழ் கையெழுத்து அதில் இடம்பெற வேண்டும் என்று சொல்லி அவருடைய தமிழ் கையெழுத்து அதில் பொறிக்கப்பட்டு அதன் பிறகு நாணயம் வெளியிடப்பட்டது. அது போல் கலைஞருடைய நாணயத்தை வெளியிடுகின்ற பொழுது கலைஞருக்கு ரொம்ப பிடித்த 'தமிழ் வெல்லும்' என்ற வார்த்தை தமிழில் எழுதப்பட்டுள்ளது. இதைக் கூட அவர் பார்க்காமல் உள்ளார்.
'ஏன் ராகுல் காந்தியை அழைக்கவில்லை' என்று எடப்பாடி கேட்கிறார். ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்களே, இந்த நிகழ்ச்சியை திமுக நடத்தவில்லை. இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஒன்று அரசு. இந்த சராசரி அறிவு கூட இல்லாமல் ஒரு எதிர்க்கட்சித் தலைவரா என்பதுதான் நமக்கெல்லாம் வேதனையாக இருக்கிறது.
ஜெயலலிதா
எம்ஜிஆருக்கும் நாணயம் வெளியிட்டார்கள். ஒன்றியத்திலிருந்து யாரும் வரவில்லை. எடப்பாடி பழனிசாமியே வெளியிட்டார். ஏனென்றால் ஒன்றிய அரசு அவரை மதிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியை ஒரு முதலமைச்சராக மட்டுமல்ல அவரை மனிதனாகவே மத்திய அரசு நினைக்கவில்லை. இதுதான் அவருக்கு இருந்த மரியாதை.
இன்று நாம் அழைத்தவுடன் அடுத்த வினாடியே ஒரு சொல் கூட தட்டாமல் ஒரு 15 நிமிடம் முதல் அரை மணி நேரத்திற்குள் நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும் என சொன்னதற்கு, 15 நிமிடம் என்ன, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருந்து நான் காத்திருந்து நிகழ்ச்சி நடத்தி தருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தார் ராஜ்நாத் சிங். இதுதான் திமுகவிற்கு இருக்கக்கூடிய பெருமை, கலைஞருக்கு இருக்கக்கூடிய சிறப்பு.
அதே நேரத்தில் நமக்கு பாஜகவுடன் ரகசிய உறவு அவசியம் இல்லை. எடப்பாடி பழனிசாமி போல, ஊர்ந்துசென்று பதவி வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. ஆதரித்தாலும் எதிர்த்தாலும் கொள்கையை விட்டுத்தர மாட்டோம். ஜெயலலிதா அம்மையாரால் உருவாக்கப்பட்டவர்கள் அவருக்கு ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தி உள்ளனரா? இரங்கல் கூட்டம் நடத்தாத அதிமுகவினர் கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை விமர்சிப்பதற்கு அருகதை இல்லை" என பேசியுள்ளார்.