திமுக கூட்டணியில் இருந்து பலர் வெளியேற வாய்ப்பு உள்ளது - தமிழிசை சௌந்தர்ராஜன்
2026-ல் திமுக அல்லாத கூட்டணி ஆட்சிதான் இருக்கும் என தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன்
சென்னை மயிலாப்பூரில் தனியார் நிகழ்வு ஒன்றில் முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "திமுக கூட்டணியில் பிரச்னை உண்டாக்க பலர் முயற்சிக்கிறார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.
கூட்டணி ஆட்சி
திமுக கூட்டணியில் யாரும் பிரச்னையை உருவாக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு, சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என திமுக கூட்டணிக்குள் அந்த கட்சிகளே பிரச்னைகளை உருவாக்குகின்றன. எனவே 2026 ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சிதான்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஒட்டுண்ணி கட்சியாகதான் இருக்கிறது. காங்கிரஸ் மதச்சார்பற்ற கட்சி என்கிற முகத்திரை கிழிந்துவிட்டது. இதனை சொன்னது பாஜக கிடையாது. கேரள முதல்வர் பினராயி விஜயன்.
மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். திமுக கூட்டணியில் இருந்து பலர் வெளியே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.எனவே, பாஜக கூட்டணியை பலம் பொருந்திய கூட்டணியாக மாற்றி, 2026 ல் திமுக அல்லாத கூட்டணி ஆட்சிதான் இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என பேசினார்.