முதல்வர் ஆளுநர் இடையேயான மோதல் - தீர்வு சொன்ன தமிழசை சௌந்தரராஜன்
எங்களுடன் போட்டி போடுவதற்கு திமுகவிற்கு தகுதி இல்லை என பாஜக மூத்த தலைவர் தமிழசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன்
பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், சென்னையில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் இன்று (ஜனவரி 13) பொங்கல் விழா கொண்டாடினார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொங்கல் "பரிசோடு இந்த பொங்கல் ஆரம்பித்திருக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் கூடுதல் பணப்பரிசு வழங்க கோரிய திமுக, இந்தாண்டு ரூ.1000 பொங்கல் பரிசாக கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஒரு ரூபாய் கூட தரவில்லை. இது கண்டிக்கத்தக்கது.
ஆளுநர்
ஆளுநர் குறித்து சிறுபிள்ளைத்தனமான செயல் என முதல்வர் கூறி இருந்தார். அதற்கு ஆளுநர் தரப்பில் இருந்தும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. நான் இரு மாநிலங்களின் ஆளுநராக பதவி வகித்ததால் கூறுகிறேன். ஒரு மாநிலம் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தது. மற்றொரு மாநிலம் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தது.
மோதல் போக்கை கடைபிடித்தால் என்ன இழப்பு ஏற்படும், இணக்கமாக இருந்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை பார்த்துள்ளேன். முதலமைச்சரும் ஆளுநரும் வேற்றுமைகளை மறந்து அமர்ந்து பேசி மாநில பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கூறுகிறேன்.
இடைத்தேர்தல்
6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. சில பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ளது. இதில் இருவரும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும். மத்திய அரசு துணை வேந்தர் நியமனம் தொடர்பாக ஒரு வரைவைதான் வெளியிட்டது. ஆனால் சட்டமே இயற்றியது போல திமுக அரசு நாடகமாடி வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை திமுக நியாயமாக நடத்தாது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம். திமுக ஒரு நேர்மையான போர் வீரன் அல்ல. எங்களுடன் போட்டி போடுவதற்கு திமுகவிற்கு தகுதி இல்லை. திமுகவை தான் அரசியல் கட்சிகள் புறக்கணித்து இருக்கிறது. 2026 தேர்தலில் மக்களால் திமுக புறக்கணிக்கப்படும்.” என கூறினார்.