ஸ்டாலினும் கருப்பை பார்த்து பயப்பட ஆரம்பித்து விட்டார் - தமிழிசை சௌந்தரராஜன்
திமுக கூட்டணி கட்சிகளையும் மிரட்ட ஆரம்பித்துவிட்டது என தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.
முரசொலி பதிலடி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறதா என திமுக அரசை விமர்சித்திருந்தார்.
இதற்கு திமுகவின் நாளிதழான முரசொலி பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கருத்துச் சொல்லிக் கொண்டு போவது தோழமைக்கான இலக்கணம் அல்ல என பதிலடி கொடுத்தது.
தமிழிசை சௌந்தரராஜன்
தொடர்ந்து இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட சிந்துவெளிப் பண்பாட்டு கருத்தரங்கு நிகழ்வில் கருப்பு நிற துப்பட்டா, கருப்பு நிற குடை, கைக்குட்டை ஆகியவை அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "கருப்பு கலர் துப்பட்டாவை கருப்புக் கொடி என நினைக்கிறார்களோ என்னவோ. அதனால் கருப்பை பார்த்து ஸ்டாலினும் பயப்பட ஆரம்பித்திருக்கிறார்.
அரண்டவர் கண்ணுக்கு தெரிவதெல்லாம் பேய் என்று சொல்வதைப்போல கருப்பாக இருந்தால் கருப்புக்கொடி காண்பிக்க வருகிறார்களோ என்று நினைக்கிறார்கள். காரணம் ஆட்சி அவ்வளவு பெரிய தவறுகளை செய்கிறது. துப்பட்டாவை எடுத்து கருப்பு கொடியாக காண்பித்து விட்டால் என்ன செய்வது என பயப்படுகிறார்களோ என எண்ண தோன்றுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து
முரசொலி எதிர்க்கட்சிகளை தான் மிரட்டிக் கொண்டிருந்தது. இன்று கூட்டணி கட்சிகளையும் மிரட்ட ஆரம்பித்துவிட்டது. தமிழ்நாட்டில் எதிர் கட்சி கூட்டணி கட்சி என அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால் திமுக யாரும் கருத்து சொல்ல கூடாது என நினைக்கிறது.
திருமாவளவன் ஏதாவது கூட்டத்திற்கு போகலாம் என நினைத்தால் ஸ்டாலின் அழைத்து போகக்கூடாது என கூறுகிறார். திமுக கூட்டணி கட்சிகளே திருப்தியற்ற சூழ்நிலையில்தான் உள்ளன. எனவேதான் சொல்கிறோம் 2026 இல் இந்த திமுக கூட்டணி இருக்காது.
சீமான் பங்குபெற்ற நிகழ்வில் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, பாரதிதாசன் பாடலையும் பாடி இருக்கலாம் எப்படி இருந்தாலும், தமிழ்த்தாய் மரியாதை குறைவாக நடத்தப்படுவதை ஏற்க முடியாது" என கூறியுள்ளார்.