நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் தெரியுமா? உண்மை உடைத்த தமிழிசை!
தான் ஏன் ஆளுநர் பதவியில் இருந்து விலகினேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் கடித்தம் எழுதி வெளியிட்டுள்ளார்.
பதவி ராஜினாமா
தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை அண்மையில் ராஜினாமா செய்தார். மீண்டும் முழுநேர அரசியலில் களமிறங்கிய அவர் வரும் மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட உள்ளார்.
இந்நிலையில் தமிழிசை தனது சமூக வலைத்தலைப் பக்கத்தில், ``தென் சென்னை மக்களுக்கு உங்கள் அன்புச் சகோதரி டாக்டர்.தமிழிசை சௌந்தர்ராஜனின் மனம் திறந்த மடல்... எனது அன்பிற்கினிய மக்களுக்கு வணக்கம்! நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என்ற கேள்வி என்னைத் தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது.
என்னைச் சந்திக்க வரும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அனைவரும் இதைக் கேட்ட வண்ணம் இருக்கின்றனர். ஆளுநர் போன்ற உயர் பதவியை துறக்க என்ன காரணம் என்ற கேள்வி எனக்கு வந்து கொண்டே இருக்கிறது. அதற்கு ஒரு விளக்கமாக இதைப் பதிவு செய்கிறேன். நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து 25 வருடங்கள் ஆகிறது.
மாநிலச் செயலாளர் ,தேசிய செயலாளர் போன்ற உயர் பதவிகளை எனது கட்சியின் தலைமை வழங்கியது. அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் மாநிலத் தலைவர் என்ற உயரிய பதவியையும் எனக்கு வழங்கியது. அதற்கெல்லாம் மேலாக தெலங்கானா மாநிலத்தின் ஆளுநர் பதவியை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு எனக்கு வழங்கியது.
தமிழிசை சௌந்தரராஜன்
மேலும் என் தாய்மொழியான தமிழ் மொழியில் பேசுகின்ற பாண்டிச்சேரி மாநிலத்திலேயே பணியாற்றுகின்ற வாய்ப்பையும் பா.ஜ.க அரசு எனக்கு வழங்கியது. ஆளுநர் என்றாலே பெருமிதம் புகழ். அதிலும் இரண்டு மாநிலத்துக்கு ஆளுநர் என்றால் சும்மாவா ? அதற்கான மரியாதையும் மகுடமும் மிகவும் உயர்ந்தது அல்லவே.
அதைப் பணிவோடு ஏற்று மகிழ்ச்சியோடு பணியாற்றி வந்தேன். ஒரு ஆளுநராக முன் உதாரணமான பல சீரிய திட்டங்களை செயல்படுத்தினேன். தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களில் நான் எடுத்த முயற்சியால் அந்த மாநில மக்கள் பயனடைந்தனர். தற்போது தேர்தல் காலம். களத்தில் எனது கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது. மீண்டும் பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். மோடி தலைமையில் இந்தியா உலகரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்தப் புகழ் தொடர வேண்டும்.
மீண்டும் மோடி பிரதமராக மூன்றாவது முறையாக அரியணையில் அமர வேண்டும். இதில் தொண்டர்களோடு தொண்டராக நானும் துணை நிற்க வேண்டும். களத்தில் நின்று பணியாற்ற வேண்டும் என்ற சீரிய வீரிய சிந்தனையோடு ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். இந்திய மக்களுக்கு மீண்டும் ஒரு சிறப்பானதொரு ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி வழங்க வேண்டும். அதற்கு நானும் கட்சிப் பணியை சிறப்பாக ஆற்ற வேண்டும் என்பதற்காக ஆளுநர் பதவியைத் துறந்தேன்.
நான் வாழுகின்ற தமிழ்நாட்டின் தென் சென்னை பகுதி மக்கள் மேலும் வளர்ச்சியடைய வேண்டும். அவர்களுக்கு ஒரு புதிய வளர்ச்சி அத்தியாயத்தை உருவாக்கித் தர வேண்டும். வாழ்வாதாரத்தை அமைத்து தர வேண்டும் என்ற காரணத்தினால் நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்.தேசிய நீரோட்டத்தில் தென் சென்னையும் இணைந்து தொழில் வளர்ச்சியிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் வீறு நடை போட வேண்டும் என்ற சிந்தனையால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்.
எனது சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் தென் சென்னை மக்கள் எனக்கு பெரும் ஆதரவை தருவார்கள் என்ற நம்பிக்கையோடு களத்தில் நிற்கின்றேன்.... ஆளுநராக இருந்த நான்... உங்கள் அக்காவாக திரும்பி வந்திருக்கின்றேன்.... விரும்பி வந்திருக்கின்றேன்.... வெற்றியை தாருங்கள்.... உங்களுக்கு பணி செய்ய காத்துக்கொண்டிருக்கின்றேன்...!" இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்