தமிழ் தமிழ்நாடு என்ற சொல் ஒன்றிய அரசுக்கு கசப்பாக உள்ளது - திருமாவளவன் குற்றச்சாட்டு
பட்ஜெட் குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பட்ஜெட்
பாஜக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று(24.07.2024) தாக்கல் செய்யப்பட்டது. 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருமாவளவன்
தற்போது இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இதில் பேசிய அவர், இந்தியா ஒன்றிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கை பீகார் ,ஆற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு முன்னுரிமை அளித்து பல்லாயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. ஆந்திராவை தவிர்த்து தமிழ்நாடு உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளன.
மேலும், வட இந்திய மாநிலங்களும் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளன. தமிழ் தமிழ்நாடு என்ற சொல் அவர்களுக்கு கசப்பாக உள்ளது. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின் போதும் திருக்குறளை மேற்கோள் காட்டுவது வழக்கம். ஆனால் இந்த முறை தமிழ்நாட்டு மக்கள் மீதான கசப்பையும் வெறுப்பையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூடி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து விவாதித்தோம். அதன்படி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். மக்களவையில் இது குறித்து எதிர்ப்பை பதிவு செய்ய இருக்கிறோம்.
இது ஒரு மோசமான பாதிப்பை ஏற்படுத்த கூடிய மக்கள் விரோத பட்ஜெட். இவர்கள் ஆட்சியை தக்க வைக்க தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளை திருப்தி படுத்த அவர்களுக்கு பணிந்து, இணைந்து இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளனர். இதை இந்தியா கூட்டணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் என பேசியுள்ளார்.