பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு
பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்
பாஜக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதில் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆளும் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதில் அவர் பேசியதாவது, இரு நாட்களுக்கு முன்பு மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தேன். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, கோவை மதுரை மெட்ரோ ரயில் அனுமதி, வருமான வரி குறைப்பு, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் இப்படி சில கோரிக்கைகளை வைத்திருந்தேன்.
ஆனால் மைனாரிட்டி பாஜகவை மெஜாரிட்டி பாஜகவாக மாற்றிய ஒரு சில மாநில கட்சிகளை திருப்தி படுத்துக்கிற வகையில் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் திட்டங்களை அறிவித்துள்ளார்கள். ஆனால் அதையும் நிறைவேற்றுவார்களா என்பது சந்தேகம் தான். எப்படி தமிழ்நாட்டுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்து விட்டு நிதி ஒதுக்காமல் ஏமாற்றி வருகிறார்களோ, அதே போல் அந்த மாநிலத்திற்கும் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.
நிதி ஆயோக்
தமிழ்நாடு 2 மிக பெரிய பேரிடரை சந்தித்தது. 37,000 கோடி வரை இழப்பீடு கேட்டிருந்தோம். ஆனால் இதுவரை 276 கோடி மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். அது சட்ட்டபடி வர வேண்டிய தொகை. நிதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் வெள்ள சேதத்தை பார்வையிட்டார்கள். ஆனால் தமிழ்நாடுக்கான எந்த சிறப்பு திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை என பேசியுள்ளார்.
மேலும் டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தேன். ஆனால் மத்திய பட்ஜெட்டில் எவ்வாறு தமிழ்நாடு புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதோ அதே போல் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.