ஆலய வழிபாடுகளில் தமிழ் முதன்மை பெற வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
முத்தமிழ் முருகன் மாநாடு
பழனியில் இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
பழனி அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் கொடியினை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
மு.க.ஸ்டாலின்
பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரி மைதானத்தில் இந்த மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டுக்கு வரும் பொதுமக்கள், பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் முருகனின் சிறப்புகள் குறித்த கண்காட்சி அரங்கங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
மாநாட்டினை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள். கோயிலிலேயே குடியிருக்கும் ஒருவர் அறநிலையத்துறை அமைச்சராக கிடைத்துள்ளார். பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பழனிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பழனி, திருத்தணி, திருச்செந்தூர், மருதமலை, குமாரவயலூர் சிறுவாபுரி, காந்தன் ஆகிய ஏழு முருகன் திருக்கோயில்களில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் நலனுக்காக கோயில் வளர்ச்சி பணிகளை தொடங்கியிருக்கிறோம். இதற்காக 58.77 ஏக்கர் நிலங்களை 58 கோடியே 54 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ரூ. 5,570 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. 69 முருகன் கோயில்களில் திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது.
திராவிட மாடல் அரசு
பழனி முருகன் கோயில் சார்பாக நடத்தப்படும் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணமில்லா காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இது விரிவுபடுத்தப்பட்டு இந்த ஆண்டு மதிய உணவும் வழங்கப்படுகிறது. அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்காக கட்டணமில்லா முடிக்காணிக்கை செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், முடி காணிக்கை பணியாளர்களுக்கு மாதம் 5000 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
திருக்கோயில் கருவறைக்குள் மனிதரிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும். ஆலய வழிபாடுகளில் தமிழ் முதன்மை பெற வேண்டும். அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கைகள் இருக்கும். அதில் உயர்வு தாழ்வு என எதுவும் இல்லை. அந்த நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு தடையாக இருந்ததில்லை. அனைவரது நம்பிக்கைக்கும் நன்மை செய்து தரக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு விளங்கி வருகிறது என பேசினார்.