கவலைக்கிடமான நிலையில் சிறுமி; 23 வகை நாய்களை வளர்க்க தடை - அரசு உத்தரவு!
23 வகை நாய்களை வளர்க்க அரசு தடை விதித்துள்ளது.
நாய் கடித்த விவகாரம்
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இங்கு பராமரிப்பாளராக உள்ள ரகு என்பவரின் மகள் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த போது,
அங்கு வந்த 2 ராட்வீலர் நாய்கள் சிறுமியை சரமாரியாக கடித்து குதறியது. இதில் சிறுமி பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நாயின் உரிமையாளர் நாய்களை எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பூங்காவுக்கு அழைத்து வந்ததுதான் இந்த நிலைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
எனவே, நாயின் உரிமையாளரான புகழேந்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் நாய்களை வளர்ப்பதற்கான புதிய வழிக்காட்டுதலை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில், சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களான, பிட்புல் டெரியர், தோசா இனு,
அரசு அதிரடி தடை
அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வீலர்ஸ்,
டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ, பேண்டாக் மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது. மேற்படி நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாடும் தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது வளர்ப்பு பிராணியாக மேற்கண்ட இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண் / பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும். நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முகக்கவசம் அணிந்து அழைத்து செல்லவேண்டும்.
அந்த இணைப்பு சங்கிலியின் அளவானது நாயின் மூக்கு நுனியிலிருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்திற்கு ஏற்பவாறு (குறைந்தபட்சம் 3 மடங்கு நீளம்) இருக்க வேண்டும். நல்ல தரமான கழுத்துப்பட்டை / தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்வது, பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக அமையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.