பீகார் ஆந்திராவிற்கு கோடி கணக்கில் நிதி ஒதுக்கீடு - தமிழ்நாடு என்ற பெயரே இடம்பெறவில்லை!
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் மற்றும் பீகார் மாநிலம் தனி கவனம் பெற்றுள்ளது. கூட்டணி ஆட்சி என்பதால், முன்னர் இருந்தே ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்கள் தனி முக்கியத்துவம் பெரும் என தொடர்ந்து கூறப்பட்டு வந்தன.
அந்த வார்த்தைகள் தற்போது கிட்டத்தட்ட உறுதியானது போலவே அமைந்துள்ளது மத்திய பட்ஜெட். இன்று சுமார் 1 1/2 மணி நேரம் மத்திய பட்ஜெட் வாசித்த நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவ்வளவு பெரிய உரையில் ஒரு முறை கூட தமிழ்நாடு என்ற பெயரை கூறவில்லை.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, தெலுங்கானா என ஆந்திராவை தவிர எந்த ஒரு தென்னிந்திய மாநிலத்தின் பெயரும் தனியாக உச்சரிக்கப்படவில்லை.அதே நேரத்தில் கூட்டணி ஆட்சிக்கு பெரிய உதவியை செய்துள்ள பீகார் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு நிதி வாரி வழங்கப்பட்டுள்ளது.
பீகார்
மத்திய அரசு தனது பட்ஜெட் உரையில் பீகார் மாநிலத்திற்கான விரிவான வளர்ச்சித் திட்டத்தை பட்டியலிட்டுள்ளது. மாநிலத்தின் உள்கட்டமைப்பு, மின்சாரம், சுகாதாரம், தொழில்துறை வளர்ச்சி, சுற்றுலா மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ரூ.58,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதனை தொடர்ந்து பல்வேறு சாலை திட்டங்களுக்காக ரூ.26,000 கோடி ரூபாயும் பட்ஜெட்டில் முன்பொழியப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகளை அமைக்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
மேலும், பீகார் அரசின் கோரிக்கையான வளர்ச்சி வங்கிகளின் வெளிப்புற உதவிக்கான கோரிக்கை விரைவுபடுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரையில்,
- அமராவதி வளர்ச்சி: மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு.
- போலாவரம் நீர்ப்பாசனத் திட்டம்: மாநிலத்தின் விவசாயத் துறைக்கு பெரும் ஊக்கமளிக்கும் போலவரம் பாசனத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கும் நிதியுதவி செய்யப்படும் என மத்திய அரசு தனது உறுதியை தெரிவித்திருக்கிறது.
- பின்தங்கிய பகுதி மானியம்: ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மூன்று மாவட்டங்கள் முறையே பிரகாசம், ராயலசீமா போன்ற மாவட்டங்கள் பின்தங்கிய பிராந்திய மானியத்தைப் பெறும் என்றும் இன்று தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.