இந்தியாவிலே குறைவான மின்கட்டணம் தமிழ்நாட்டில்தான் - தமிழக அரசு பெருமிதம்
தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலே குறைவான மின் கட்டணம் வசூலிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மின் கட்டணம்
வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில்தான் மிகமிகக் குறைவாக உள்ளது. மின்சாரக் கட்டணங்கள் மற்றும் வரி குறித்த சராசரி குறித்து 2023 மார்ச் நிலையில் புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு அரவிந்த் வாரியர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
இலவச மின்சாரம்
இந்த விவரங்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணங்களை ஒப்பிட்டுப்பார்த்தால் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் வீட்டு உபயோக மின்கட்டணம் வேறு எந்த ஒரு மாநிலத்தையும்விட மிகமிகக் குறைவாக உள்ளது என்ற உண்மை வெளிப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில்தான் விவசாயிகளுக்கு முதன்முதலில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியிலும் 2 இலட்சம் விவசாய பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிட ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, விசைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை ஆயிரம் யூனிட்வரை இலவச மின்சாரம் அளிக்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை 300 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படுகிறது. என்றாலும் வீடுகளுக்கு வழங்கப்படும் கட்டணம் மற்ற மாநிலங்கள் போல் உயர்த்தப்படவில்லை.
மும்பை மின் கட்டணம்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாகும். வீடுகளில் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்திற்கு சராசரியாக கணக்கிடும்போது கட்டணம் ரூ.113ஆகும். இந்த சராசரி கட்டணத்தோடு ஒப்பிடும்போது மும்பை 100 யூனிட்டுக்கு ரூ.643 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மும்பையில் ஒரு விசித்திரம் என்னவென்றால், அதானி ஒப்பந்தத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.643, டாடா நிருவாகத்தின் மூலம் அளிக்கப்படும் மின்சாரக் ரூ.524, மும்பை பிரிகான் எலக்ட்ரிசிடி மூலம் அளிக்கப்படும் மின்சாரக் கட்டணம் ரூ.488.
பிற மாநிலங்கள்
இராஜஸ்தான் மாநிலத்தில் 833 ரூபாயும் , மராட்டிய மாநிலத்தில் 668ரூபாயும், உத்திர பிரதேசத்தில் 693ரூபாயும், பீகாரில் மாநிலத்தில் 684ரூபாயும், மேற்கு வங்க மாநிலத்தில் 654ரூபாயும், கர்நாடக மாநிலத்தில் 631ரூபாயும், மத்திய பிரதேசத்தில் 643ரூபாயும், ஒரிசா மாநிலத்தில் 426ரூபாயும், சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ.431 மின்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இப்படி, இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்கட்டணத்தை உயர்த்தி வழங்கும்போது தமிழ்நாட்டில்தான் மிகமிகமிகக் குறைவாக ரூ.113 வசூலிக்கப்படுகிறது. இதனை திராவிட முன்னேற்ற கழகமோ, தமிழ்நாடு அரசோ, குறிப்பிட்டு சொல்லவில்லை. இந்திய மாநிலங்களில் நிலவும் மின்சார கட்டணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து அரவிந்த் வாரியர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.