உங்கள் வீட்டிற்கு இலவச மின்சாரம் வேண்டுமா? இதை செய்தால் போதும்
வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை பெற மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
மின் கட்டணம்
இந்தியாவில் மக்கள் தொகை பெருக பெருக மின்சார தேவையும் அதிகரித்து கொண்டுள்ளது. மின்சார பயன்பாடுகளும் அதிகரித்துள்ளதால், மின்சார தேவைக்கேற்ப மின்சாரத்தை தயாரிப்பது அரசுக்கு சவாலாக மாறியுள்ளது.
இதனால் மக்களுக்கு தேவையான மின்சாரத்தை மக்கள் தங்களது வீடுகளிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் திறனை உருவாக்குவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் மத்திய அரசின் சூரிய கர் யோஜனா. ஒரு கோடி மக்களுக்கு சூரிய மின்சக்தியின் பலன்களை வழங்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
சூரிய கர் யோஜனா
இந்த திட்டத்தில் சேரும் நபர்களின் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு மானியத் தொகையும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வீட்டு பயன்பாட்டுக்கும் எடுத்துக்கொள்ளலாம்.
1-150 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில் 1-2 கிலோவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட சோலார் பேனல்களை பொருத்தி ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை மானியம் பெறலாம். 150-300 யூனிட் மின்நுகர்வு கொண்ட வீடுகளுக்கு 2-3 கிலோவாட் சோலார் பேனல் பொருத்தி ரூ.60,000 முதல் ரூ.78,000 வரை மானியம் பெறலாம்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
இந்த திட்டத்தில் இணைவதற்கு சோலார் பேனல் நிறுவதற்கு ஏற்ற கூரையுடன்(Roof Top) சொந்த வீடு வைத்திருக்க வேண்டும். முறையான மின் இணைப்பு இருக்க வேண்டும். அந்த குடும்பம் சோலார் சம்பந்தமாக வேற எந்த மானியமும் பெறக்கூடாது.
இந்த திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் அரசின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு https://www.pmsuryaghar.gov.in சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அடையாள சான்று, முகவரி சான்று, மின்கட்டண ரசீது, கூரை உரிம சான்று ஆகிய ஆவணங்கள் தேவைப்படும்.
.