சேல்ஸ்மேன் மாதிரி விளம்பரம்; மோடி வாக்குறுதிக்கு கேரண்டி இல்ல - முதல்வர் காட்டம்!
மோடியின் வாக்குறுதிகளுக்கு கேரண்டி வாரண்டி இல்லை என முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
மு.க ஸ்டாலின்
நடப்பாண்டில் மக்களவை தேர்தல் நடக்கவிருப்பதால் தமிழக அரசியல் காட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது பரப்புரையை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் அடுத்த கிருஷ்ணன் கோயிலில் தென்காசி மக்களவைத் தொகுதி தி.மு.க.வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் தி.மு.க. அரசின் திட்டத்தால் பயனடைந்து உள்ளது. தாய்வீட்டுச் சீர் போல பெண்களுக்கு உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட முத்தான 3 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழக அரசின் காலை உணவு திட்டத்தால் தமிழகத்தில் 16 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர். சமூக நீதிக்கு பா.ஜ.க.வால் ஆபத்து; இட ஒதுக்கீடுக்கு தீங்கு இழைக்கும் கட்சி பா.ஜ.க. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வந்த போதும் பா.ஜ.க மறுத்து வருகிறது.
சேல்ஸ்மேன் மோடி
சிறுபான்மையின மக்களுக்கு மட்டுமின்றி, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரி தான் பா.ஜ.க. தேர்தல் பத்திரங்கள் மூலம் பெரிய ஊழலை பா.ஜ.க செய்துள்ளதாக ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சட்டவிரோதமாக சீன பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனை பா.ஜ.க.வால் தடுக்க முடியவில்லை. சீன பட்டாசுகளால் சிவகாசியில் ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது. சரிந்த பட்டாசு தொழிலை சரி செய்ய பா.ஜ.க அரசு எதையும் செய்யவில்லை.
தேர்தலுக்கு தேர்தல் மட்டும் மக்களின் மீது கருணை சுரக்கும் வித்தியாசமான உள்ளம் மோடியுடையது. நாட்டை படுகுழியில் தள்ளிய பா.ஜ.க.விடம் இருந்து நாட்டை மீட்கவே இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம்.
மோடியின் வாக்குறுதிகளுக்கு கேரண்டி வாரண்டி எதுவும் இல்லை. சேல்ஸ்மேன் மாதிரி விளம்பரம் செய்கிறார்.
கருப்பு பணத்தை மீட்டு வங்கியில் ரூ.15 லட்சம் போடுவதாக சொன்னாரே மோடி செய்தாரா? ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்ற மோடியின் வாக்குறுதி என்ன ஆனது? இவ்வாறு கூறியுள்ளார்.