பொங்கல்: சொந்த ஊருக்கு செல்வதில் சிக்கல் - பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்!
பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
பொங்கல் பண்டிகை
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர், பெங்களூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசிப்போர் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
தொடர்ந்து, ரயில்களில் நான்கு மாதத்திற்கு முன்பே டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்து போனது. மேலும், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் எகிறியுள்ளது. இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9-ந் தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
அரசு ஆலோசனை
போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடடியாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்.
கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை வேண்டும். போக்குவரத்து துறையின் வரவுக்கும், செலவுக்கும் இடையேயான தொகையை பட்ஜெட்டில் அரசு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஒருவேளை வேலைநிறுத்தம் நடந்தால், பொங்கல் வரை தொடரும் பட்சத்தில் அது, மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் பரபரப்பு நிலவுகிறது.
பொங்கல் விடுமுறைக்கு பின்பு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சினைகளும் தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.