கள்ளகுறிச்சி மாணவி உயிரிழப்பு - தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் முதல்வருக்கு கடிதம்
குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு அரசு உரிய இழப்பீடை வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளது.
மாணவி உயிரிழப்பு
இதுதொடர்பாக முதலமைச்சருக்கு எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில், “ கடந்த 13 சூலை 2022 அன்று செய்திகளில் கள்ளகுறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தனது பள்ளி விடுதியின் மூன்றாம் மாடியில் இருந்து விழுந்து இறந்த செய்தி கேட்டு அதிர்ந்தோம்.
மரணமடைந்த குழந்தையின் தாய் ஊடகங்களில் மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் குறித்து எழுப்பிய வினாக்களும், அதனை தொடர்ந்து பள்ளிக்கு எதிராக இந்த சம்பவத்திற்கும் இதற்கு முன் இதே பள்ளியில் நிகழ்ந்த்தாக கூறப்படும் மற்ற சந்தேகே மரணங்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கும் நீதி கேட்டு போராட்டங்கள் நடந்ததும்,
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம்
உச்சக்கட்டமாக அந்த போராட்டம் வன்முறையாக மாறி அந்த பள்ளி தீக்கிரையாக்கப்பட்ட சம்பவமும் அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கு இப்போது CBCID எனம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இத்த சம்பவத்தில் உண்மை வெளி வரும் என்றும்,
குழந்தையின் இறப்பிற்கு காரணமான குற்றவானிகள் கண்டிப்பாக கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறோம். எதிர்பார்க்கிறோம். குழந்தைகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து இயங்கி வரும் கள செயல்பாட்டாளர்களின் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பான தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம்,
கல்வி உரிமை
குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி உரிமைகளை உறுதி செய்யவும் உழைத்துவரும் சூழலில், இது போன்ற சம்பவங்கள் கல்வி மீதும் பள்ளியின் மீதும் அதிருப்தியை உருவாக்கி பெண்கல்வியில் சமூக நீதியை உயர்த்தி பிடித்து தமிழ்நாடு உருவாக்கி இருக்கும் முன்னேற்றத்தை பின்னோக்கி தள்ளிவிடுமோ என அஞ்சுகிறோம்.
குழந்தைகளின் மகிழ்ச்சியான கல்வி உரிமையை பாகுபாடின்றி அனைவருக்கும் உறுதி செய்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் தங்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு எங்களின் ஆலோசனைகளை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.
அடையாளங்களை வெளியிடுவது
குழந்தைகள் பாதிக்கப்படும் சம்பவங்களில் அவர்களின் அடையாளங்களை வெளியிடுவது குழந்தைகளின் கண்ணியத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. பாதிக்கப்படும் குழந்தைகளின் அடையாளங்களை வெளியிடுவதை சட்டப்படி தடுக்கும் வகையிலும் அதளை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து அதனை மீறும் தனி நபர்கள்,
சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகள் தங்களது பிரச்சனைகளை பேச குழுக்கள் மற்றும் குறை தீர்வுக்கான வழிமுறைகளையும் குழந்தைகளின் பங்கேற்புடன் உருவாக்கி தீவிரமாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இழப்பீடு வழங்க வேண்டும்
குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க அரசு முன் வர வேண்டும். மேற்சொன்ன எங்களது கோரிக்கைகளை ஏற்று குழந்தைகள் கல்வி உரிமை
அனைத்து குழந்தைகளுக்கும் வன்முறை அற்ற சூழலில், மகிழ்ச்சியாகவும், எவ்வித பாகுபாடும் இன்றியும் கிடைத்திடவும் அரசு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுகொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது