கள்ளக்குறிச்சி மாணவி உடலை அடக்கம் செய்யும்போது கண்ணீர் விட்டு அழுத அமைச்சர்...!

Kallakurichi School Death Kallakurichi
By Nandhini Jul 23, 2022 07:54 AM GMT
Report

மாணவியின் உடல் அடக்கம் செய்யும்போது, அமைச்சர் கணேசன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இறுதி அஞ்சலி

கள்ளக்குறிச்சி மாணவி உடலை இன்று காலை மாணவியின் பெற்றோர் பெற்றுக்கொண்ட நிலையில் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதையடுத்து உறவின் முறைபடி மாணவியின் தாய்மாமன் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து தாய் மற்றும் தந்தை கதறலுக்கு இடையே மாணவிக்கு இறுதி சடங்குகளை மாணவியின் உறவினர்கள் செய்தனர்.

kallakurichi-school-student-death

தொடர்ந்து மாணவியின் இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் கணேசன், மாவட்ட ஆட்சியர், ஊர் பொதுமக்கள் மற்றும் பல அரசியல் கட்சி உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் உடல் பெரியநெசலுார் கிராம மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சில சாஸ்திர முறைப்படி சடங்குகள் செய்த பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மாணவியின் தந்தை பேட்டி

உடல் அடக்கம் செய்யப்பட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த மாணவியின் தந்தை இராமலிங்கம் இதுவரைக்கும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

இதன் பின் தான் நீதி கிடைக்கும் என்று நம்புவதாக பேசினார்.  எனது மகளை புதைக்கவில்லை.. விதைத்திருக்கிறேன் என்ற அவர், விதை மரமாக வந்து அவர்களது குடும்பத்தை வேரருக்காமல் விடாது.

என் பிள்ளைக்கு நடந்த கொடுமை இந்தியாவில் வேற எந்த பிள்ளைக்கும் நடக்க கூடாது என்று கண்ணீர் மல்க பேசினார்.

கண்ணீர் விட்டு அழுத அமைச்சர்

மாணவியின் உடல் அடக்கம் செய்யும்போது, அமைச்சர் சி.வெ.கணேசன் கண்ணீர் விட்டு அழுதார். மேலும், மாணவியின் ஆன்மா அமைதியாக இளைப்பாற வேண்டி சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துமாறு அங்கிருந்த அனைவரையும் அமைச்சர் கணேசன் கேட்டுக்கொண்டார்.இதனையடுத்து, அங்கிருந்த அனைவருமே மாணவிக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

kallakurichi-school-student-death

கூட்டத்தில் ஒருவர் திடீரென மாணவிக்கு வீரவணக்கம் என்று முழங்கினார். அப்போது, அங்கு கூடியிருந்த அனைவரும் மாணவிக்கு வீரவணக்கம் என்று தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதனையடுத்து, உறவினர்கள் கண்ணீருடன் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.