ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் - தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கு தொடர்பு?
போதைப்பொருள் கடத்தல் கும்பலை டெல்லி போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடத்தல் கும்பல்
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு சூடோபெட்ரைன் (pseudoephedrine) எனப்படும் வேதிப்பொருள் ஏற்றுமதி செய்யப்படுவதாக அந்த நாடுகளைச் சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளிடமிருந்து, இந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இந்த வேதிப்பொருள் மெத் எனும் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருளாகும். மேலும், இந்த வேதிப்பொருள் தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர்
இந்நிலையில், டெல்லி போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சூடோபெட்ரைன் வேதிப் பொருளைக் கடத்த முயன்ற 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து அதிகாரில் நடத்திய விசாரணையில், அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 3,500 கிலோ வேதிப் பொருளைக் கடத்தி, அதன் மூலம் சுமார் ரூ.2000 கோடி வரை சம்பாதித்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் தான் இந்த கும்பலின் மூளையாக செயல்பட்டுள்ளார். அவர் தலைமறைவாக இருப்பதால் அவரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.