கன்னத்தில் அறைந்த இயக்குநர்; பிரச்சனையே அதுதான் - பத்மபிரியா பளீச்
படப்பிடிப்பு ஒன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பத்மபிரியா பகிர்ந்துள்ளார்.
நடிகை பத்மபிரியா
தமிழில் சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பத்மபிரியா. தொடர்ந்து, சத்தம் போடாதே, பட்டியல், மிருகம், பொக்கிஷம் உட்பட பல படங்களில் நடித்தார்.
மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய பத்மபிரியா,
“தமிழ் சினிமாவின் படப்பிடிப்பு ஒன்றில் நடந்த சம்பவம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நான் உணர்வுப்பூர்வமாக நடிக்கவில்லை என்று டைரக்டர் என்னை கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரத்தை நான், நடிகர் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன்.
அதிர்ச்சி சம்பவம்
இயக்குநர் என்னை அறைந்தார். ஆனால் நான் அந்த இயக்குநரை அடித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஒரு பெண் பிரச்னைகளைப் பற்றிப் பேசினால், அந்த பிரச்னை அவர்களுக்கு எதிராகவே திருப்பிவிடப்படுகிறது. இயக்குநரை கேள்வி கேட்டதால் ஏற்கெனவே ஒப்பந்தமான படங்களில் இருந்தும் நீக்கப்பட்டேன்.
ஆண்களுக்கு தரப்படும் வலுவான கேரக்டர்களைப் பெண்களுக்கு தருவதில்லை. அதற்கான வாய்ப்பு பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. பெண்களுக்கு அழகான ஹீரோயின், மனமுடைந்த ஹீரோயின், டான்ஸ் ஆடும் ஹீரோயின், இதுபோன்ற கேரக்டர்களைதான் பெரும்பாலும் தருகிறார்கள்.
நடிகர்களுக்குத்தான் சினிமாவில் மார்க்கெட் என்று கூறிவருகிறார்கள். 90 சதவிகித திரைப்படங்கள் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலையில் நடிகர்களால்தான் படங்கள் ஓடுகிறது, நடிகைகளால் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.