தயாரிப்பாளர் சங்கம் வைத்த செக் - நடிகர் சங்கம் பதிலடி ; பரபரக்கும் தமிழ் திரையுலகம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தீர்மானத்திற்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தயாரிப்பாளர் சங்கம்
தமிழத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு OTT தளங்களில் வெளியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு நிறுத்தம்
ஒரு சில நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்ஓரு தயாரிப்பு நிறுவனத்திடம் முன்பணம் பெற்று விட்டு அந்த திரைப்படத்துக்கு பணி புரியாமல் புதிதாக வரும் திரைப்பட நிறுவனங்களுக்கு சென்று விடுகிறார்கள். இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே இனி எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்று இருந்தால் அந்த திரைப்படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு தான் அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இன்றைய தேதியில் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி நிற்கிறது. அந்த நிலையை மாற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது. அந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு படப்பிடிப்புகள் ஆரம்பிக்கலாம் என்பதால் வருகிற 16.8.2024 முதல் புதிய திரைப்படங்கள் துவங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்று கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருப்பதால் அதை முறைப்படுத்த பல்வேறு முயற்சி செய்து தமிழ் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டி உள்ளது. அதனால் வருகிற 01.11.2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்துவது என கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடிகர் சங்கம்
இனிவரும் காலங்களில் திரைத்துறை சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளடக்கிய கூட்டுக் குழு (Joint Action Committee) அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தீர்மானத்தை கண்டித்து நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நடிகர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் படப்பிடிப்பை நிறுத்தும் முடிவை வன்மையாக கண்டிக்கிறோம் இந்த தீர்மானத்தை திரும்ப வேண்டும் எனவும் கூறியுள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக விரைவில் நடிகர் சங்க செயற்குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு இடையேயான இந்த மோதல் போக்கு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.