உங்க குழந்தையை இப்படி செய்வீங்களா? ஆசிரியர் கொடூர தண்டனை - பெற்றோர்கள் ஆவேசம்!
குழந்தைகளுக்கு கொடூர தண்டனை அளித்த ஆசிரியர் மீது பெற்றோர்கள் ஒரு மனுவை அளித்தனர்.
தண்டனை
தஞ்சை மாவட்டத்தில் அய்யம்பட்டி என்னும் கிராமம் ஒன்றுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள் ஆவார். இங்கு அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த கனிஷ் வர்மா. நிதிஷ், கவின், ரோஷன், சஷ்மிதா ஆகியோர் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான புனிதா ஒரு மாணவி உட்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி 2 மணி நேரமாக வகுப்பறையில் அமர வைத்ததாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் 21ம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போதுதான் அவரவர் பெற்றோருக்கு தெரிய வந்ததால் அவர்கள் பெரும் மனவேதனை அடைந்தனர். இதனால் பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று கேட்டு உள்ளனர்.அதற்கு அவர் கூறிய பதில் இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெற்றோர்கள் அவேசம்
உங்கள் பிள்ளைகள் வகுப்பறையில் பேசிக் கொண்டு இருந்ததால் செல்லோ டேப் ஒட்டியதாக தெரிவித்தார். இதே உங்கள் வீட்டு குழந்தையாக இருந்தால் இப்படி செய்வீர்களா என்று பெற்றோர்கள் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
படிக்க அனுப்பினால் குழந்தைகளை இப்படியா இம்சை செய்வது. கண்டிக்க வேண்டிய விதத்தில் கண்டிக்காமல் இப்படி செல்லோ டேப் ஒட்டி இரண்டு மணிநேரம் வரை உட்கார வைப்பது சரியானதா என்று கேட்டும் எவ்வித பதிலும் தலைமை ஆசிரியர் தரப்பில் இருந்து வரவில்லை.
எனவே மேலும் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் புகைப்பட ஆதாரத்துடன் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர்.