ரோஹித்,கோலிக்கு கடைசி வாய்ப்பு இதுதான்; ரெடியா இருக்கீங்களா? எச்சரித்த முன்னாள் வீரர்!
ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசியுள்ளார்.
உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது.
அதில், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தற்போது ரோஹித் தலைமையிலான இந்திய அணி அமெரிக்காவுக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்த தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோருக்கு இதுவே கடைசி டி20 உலகக்கோப்பை வாய்ப்பாக இருக்கும் என்று முன்னாள் வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.
தயாராக இருக்கிறீர்களா?
ஏனெனில் 35 வயதை கடந்து விட்ட அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை பிசிசிஐ கொண்டு வந்து விடும் என்று அவர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது "தாம் நீண்ட காலம் விளையாட போவதில்லை என்பது ரோஹித் ஷர்மாவுக்கு தெரியும்.
இன்னும் 2 - 3 வருடங்கள் மட்டுமே உள்ளன. இதே நிலைதான் விராட் கோலிக்கும் . எனவே, இது ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலிக்கு கடைசி வாய்ப்பு. ஒருநாள் உலகக்கோப்பை பைனலில் அவர்கள் தோல்வியை சந்தித்தனர். அந்த தொடரில் சிறப்பாக விளையாடியும் அவர்களிடம் இருந்து கோப்பை பறிக்கப்பட்டதால் இதயங்கள் உடைந்து ரசிகர்கள் நொறுங்கினர்.
இந்த முறை லீக் சுற்றில் இந்தியாவுக்கு பெரியளவில் போட்டியில்லை. இந்தியாவுக்கு அரையிறுதி மற்றும் இறுதி ஆகிய 2 போட்டிகள் மட்டுமே கடினமாக இருக்கும். நீங்கள் அந்த 2 நாட்களுக்கு தயாராக இருக்கிறீர்களா? இதுவே ரோஹித் ஷர்மாவுக்கு மிகப்பெரிய சோதனையாகும்" என்று தெரிவித்துள்ளார்.