புதிய வரலாறு படைத்த ஹர்திக் பாண்டியா...டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடம்!
டி20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்தார்.
ஹர்திக் பாண்டியா
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது. ஒட்டுமொத்த தொடரில் கோப்பையை வெல்ல இந்திய அணியின் அனைத்து வீரர்களும் அவர்களது முழு பங்களிப்பை அளித்தனர்.
குறிப்பாக ஹர்திக் பாண்டியா ஒரு ஆல் ரவுண்டராக 11 விக்கெட்டுகளும், 144 ரன்களும் குவித்து அசத்தினார். போட்டிகளில் இந்திய அணி இக்கட்டான சூழலில் தவித்த போதெல்லாம் தனது திறமையை சரியாக பயன்படுத்தி கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார் பாண்டியா.
இறுதி போட்டியில் அணி தோல்வியின் விளிம்பில் திணறிய போது ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்துவீசி கிளாசன் மற்றும் மில்லர் உட்பட 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். முக்கியமாக கடைசி ஓவரை சிறப்பாக வீசி இந்தியா வெல்ல காரணமாக இருந்தார் பாண்டியா.
தரவரிசையில் முதலிடம்
இதனால் இப்போது அவருக்கு சிறப்பான வெகுமதியை சூடியுள்ளது ஐசிசி. இந்த நிலையில், ஐசிசி சிறந்த ஆல் ரவுண்டர் பட்டியலில் தற்போது முதலிடத்திற்கு ஹர்திக் பாண்டியா முன்னேறியுளார். 222 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
இவரை தொடர்ந்து இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளரான ஹசரங்காவும் 222 புள்ளிகளுடன் முதலிடத்தில் இடம் பிடித்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 211 புள்ளிகளுடன் 3ம் இடமும், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா 210 புள்ளிகளுடன் 4ம் இடமும்,
வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் 206 புள்ளிகளுடன் 5ம் இடமும் பிடித்துள்ளார். இப்பட்டியலில் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய இந்தியாவின் அக்சர் படேல் 7 இடங்கள் முன்னேறி 12ம் இடம் பிடித்துள்ளார்.